நான் படித்த பள்ளிக்கூடம் வானொலி - தொடர்
HOW I LEARNED RADIO BROADCASTING
பிசையாத களிமண் - 1
ஒருத்தி அல்லது ஒருவனின் முதல் பள்ளிக்கூடம் அவள் அல்லது அவனின் தாய்.
என் முதல் பள்ளிக்கூடம் வானொலி.
ஒரு தாயின் கருவறையிலிருந்து பிரசவித்ததும் விழுவது பூமியின் மடியில்.
அதுபோல நான் வனொலியின் மடியில் விழுந்தேன்.
எனக்கு அது பெயர் சூட்டியது, பூச் சூடியது
நா பழகவும் நடை பழகவும் சொல்லித்தந்தது
மொத்தத்தில் என்னை ஒரு மனிதனாக செதுக்கியது.
"போடா போ" என்று ஒரு நாள் என்னை விரட்டியது.
அன்று ஒட ஆரம்பித்தேன்.
அந்த ஓட்டம் இன்னும் ஓயவில்லை
.
ஹோட்டல் ஒன்றில் வாசகம் ஒன்று பார்த்தேன்.
"எங்களிடம் நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள், குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்"
இன்று என் வயது 65.
இப்போது என்னிடம் நிறை கண்டால் அந்தப் பெருமை வனொலியைச் சேரும். குறை கண்டால் அந்த சிறுமை என்னையும் சேரும்.
1978 முதல் 1994 வரை 16 ஆண்டுகள், வானொலியில், வானொலியைப் படித்தேன்.
இந்த காலகட்டத்தில், பல ஒலிபரப்பு வடிவங்களை படிக்க, பழக, பரிசோதிக்க என்னை அனுமதித்தது வானொலி.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பு முடிந்ததும், தேர்வு முடிவை எதிர்நோக்கும் ஒரு மாணவனைப்போல் நேயர்களின் கடிதங்களுக்காகக் காத்திருப்பேன்.
பிசையாத களிமண்ணாக வானோலியில் நுழைந்தபோது பி எஸ்ஸி (அக்ரி) என்ற மூன்றெழுத்துக்கள் என் பெயருக்குப் பின்னாலும் ஆறு ஆண்டுகள் விவசாயத்துறை வேலை அனுபவமும், சம கால இலக்கிய பரிச்சயமும் என் கக்கத்தில் இருந்தன.
(தொடரும்)
No comments:
Post a Comment