எங்கள் தோட்டம் சிறியதுதான். ஓண்ணரை ஏக்கருக்கும் கொஞ்சம் குறைவு. மா, சப்போட்டா, ஜம்புநாவல், ஆரஞ்சு என கிட்டத்தட்ட 150 பழமரங்கள், அது போக இதர ஜாதி காட்டு மரங்கள் என மினி தோப்பாக இருக்கும். அதில் கட்டிய தேன்கூடுதான் இது. ஈக்களோடு அதை பார்த்தபோது அது எங்கள் தோட்டத்திற்கு இயற்கை தந்த அங்கீகாரம் என்று நினைத்தேன். பெருமையாக இருந்தது.
மலைத்தேனீக்கள் கூடுகட்டும் பெருமைக்கு உரியது எங்கள் தோட்டம் .
“இப்போ அழிச்சா கூட ரெண்டு மூணுகிலோ தேன் எடுக்கலாம் சார்”; என்றான் குமார், அதை முதன்முதலில் பார்த்தபோது.
“இது மலைத்தேனி. சாதாதேனி மாதிரி அழிச்சுட முடியாது” என்றார்; வெங்கடேசன்.
கடைசியாக “நீங்க சரின்னு சொல்லுங்க தேன்அழிக்க எங்க ஊர்ல ஆட்கள் இருக்காங்க” என்றார் கவுரி.
குமார், வெங்கடேசன் கவுரி மூவரும் எங்களுடன் வேலை பார்ப்பவர்கள்.
“முகம் தலை உடம்பு எல்லாம் துணிசுற்றிக்கொண்டு கையில் பந்தத்துடன் போனால் எப்படிப்பட்ட தேனீக்களும் பறந்துடும்” இது என் தம்பி.
“அவ்ளோ சுலபமா பறந்துடாது. துரத்தி துரத்தி கொட்டும். மலைத்தேனிக்கு விஷம் ஜாஸ்தி. கொட்டினா பிழைக்கறது கஷ்டம். இந்த கூட்டை கலைக்க வேண்டாம்” இப்படி தீர்மானமாய் முடிவெடுத்தாள் என்; மனைவி. வழக்கம்போல “ஆமென்” என்று சொல்ல தேன்கூடு தப்பியது.
நாங்கள் எல்லோருமே மரியாதைக்குரிய தொலைவில் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தோம்.
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி என் நண்பர் ஒருத்தர் மலைத்தேனி கொட்டி ஒரு மாசம் மூச்சுப்பேச்சு இல்லாம ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார். உயிர் பிழைச்சி வர்றதுக்குள்ள ரெண்டு பெரிய நோட்டு செலவாச்சி.
கொடைக்கானல் போகும் சாலையில் மலைப்பகுதியில் பைக்கில் செல்லும்போது இது நடந்தது. லட்சக்கணக்கான ஈக்கள் ஒரே சமயத்தில் அவரைக்கொட்டி சாய்த்தது. ரோடு வேலை செய்த ஜனங்கள் பந்தத்தைக் கொளுத்தி தேனீக்களை விரட்டினார்கள். இல்லையென்றால் அவர் அங்கேயே பிணமாகி இருப்பார்.
இந்த சம்பவம் வருமாறு குறுநாவல் ஒன்று எழுதினேன். அந்த ஆண்டின் சிறந்த குறுநாவல் என்று பரிசு தந்து பாராட்டியது கணையாழி பத்தி;ரிக்கை. அதற்கும் முன்னதாகவே எனக்கு தேனீக்கள் மீது ரொம்ப மரியாதை. காரணம் உலகமே தேனீக்களை உழைப்பின் அடையாளமாக பகர்கிறது.
எங்கள் தோட்டத்தில் ஒரு ஜம்புநாவல் மரத்தில் கட்டி இருந்தது அந்த மெகா சைஸ் தேன்கூடு. வெறும் அய்ந்தடி உசரத்தில் தாழ்வான கிளைகளை இணைத்து கட்டி இருந்தது. ரொம்பப் பக்கத்தில் இருந்து பார்த்தால்கூட தெரியவில்லை. மண்டி இருந்த இலைகளும் கிளைகளும் அதை மறைத்திருந்தது.
ஓங்கி உயர்ந்த மரங்களில்தான் நான் தேன்கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.
குறுநாவல் எழுதும்போது தேனீக்கள் பற்றி திரட்டிய தகவல்கள் என் நினைவுக்கு வந்தது. அவற்றை எல்லாம் உதறி எடுத்து சுத்தப்படுத்தினேன்.
அவற்றை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.
சிட்டுக்களின் கூட்டினைப்போல தேன்கூடும் என்னை எப்போதும் சுண்டி இழுக்கும். அருங்கோண வீடுகளைக்கொண்ட தேன்கூடு குருவிக்கூட்டைவிட ஹைடெக். ஆனால் குருவிக்கூடு குடிசைவீடு மாதிரி. தேன்கூடு அப்பார்ட்மெண்ட் வீடு.
சுமாராக 50000 தேனீக்கள் குடியிருக்கும் தொகுப்புவீடுதான் ஒரு தேன்கூடு. வீடுகட்ட நாம் பயன்படுத்துவது சிமெண்ட். தேனீக்கள் உபயோகப்படுத்துவது ஒருவகை மெழுகு. வேலைக்கார தேனீக்கள் இந்த மெழுகை தன் வயிற்றிலிருந்து சுரக்கின்றன. இந்த மெழுகில்தான் இவை தங்களின் அழகான அறுங்கோண வீடுகளைக் கட்டுகின்றன.
நம்மைப்போலவே தேனீக்களும் பேஸ்மண்ட் போட்டு வீடு கட்டுகின்றன. இதற்கு விசேஷமான ஒரு பொருளை பயன்படுத்துகின்றன. அதன் பெயர் புரோபோலிஸ். இந்த புரபோலிஸ் பேஸ்போட்டு அதன்மீதுதான் தேனீக்கள் தன் வீடுகளை கட்டுகின்றன. தேனி வீடுகளை ஈரமும் பாக்டீரியாக்களும் தாக்காமல் தாங்கிப் பிடிக்கின்றன இந்த புரோபோலிஸ்.
இப்போதெல்லாம் ஒரே வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கட்டுவது வாடிக்கை. ஆம்பதாயிரம் வீடுகளைக் கொண்ட தேன்கூட்டிற்கு ஒரேஒரு வாசல்தான். நம்பமுடியவில்லையா ? நம்பித்தான் ஆகவேண்டும். அம்பதாயிரம் ஈக்களும் அந்த ஒரு வாசலில்தான் வந்துபோக வேண்டும்.
தனது எடையைப்போல 30 மடங்கு எடையை ஒரு தேன்கூடு தாங்கும்.
தேன்கூட்டில் தேனீக்கள் என்னென்ன வைத்திருக்கும். அதுல தேன்குடங்கள் இருக்கும். அதில் தேன் இருக்கும். தண்ணீர் குடங்கள் இருக்கும். அதில் தண்ணீர் இருக்கும். அடுத்து மகரந்தப்பெட்டிகள் இருக்கும். அதில் மகரந்தத்தூள் அடைத்து வைத்திருக்கும்;.
அடுத்து முட்டைகள் வார்ட் ஒண்ணு. இளம்புழுக்களுக்கான வார்ட் இன்னொண்ணு. அடுத்து வேலைக்கார தேனீக்களின் குவாட்டர்ஸ.; அடுத்து ராணித்தேனியின் அந்தப்புறம்.
ஒரு கூட்டின் மேற்புறம் தேன் இருக்கும். அடிப்பக்கம் ராணி வசிக்கும்.
“வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க. தேனீக்களுக்கும் தேன்கூடு காஸ்ட்லி சமாச்சாரம். ஒரு அவுன்ஸ் மெழுகு தயாரிக்க எட்டு அவுன்ஸ் தேனை செலவாகும். இரண்டு முதல் மூன்று வார வயது தேனீக்கள்தான் தரமான மெழுகினை சுரக்கும். வயசாளி தேனீக்கள் சுரக்கும் மெழுகு தரமானதாக இருக்காது.
சுமார் மூன்றுமாத காலம் எங்கள் தோட்டத்தில் இருந்தது அந்த ராட்சச தேன்கூடு. அதற்குப்பிறகு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குழாயில் சொட்டும் தண்ணீih குடித்துவிட்டு போகும். தேனடையில் தண்ணீரைக்கூட சேமிக்கின்றன என்று தெரிந்ததும,; அவை அதை எடுத்துக்கொண்டும் போகும் என தெரிந்தது.
தேன்கூட்டிலிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் இருக்கிறது ஒரு சிறிய தண்ணீ;ர் தொட்டி. ஒரு பிளாஸ்டிக் தட்டில்; தண்ணீர் பிடித்து கொஞ்சம் கூட்டுக்குப் பக்கத்தில் வைத்தோம். அவை தட்டில்வைத்த தண்ணீரை சட்டை செய்யவில்லை. குழாய் தண்ணீரை குடிக்கவே படையெடுத்து வந்தன எங்கள் வீட்டுக்கு.
மூன்று மாதம் போனது. இந்த வருஷம் ஜனவரியே மார்ச் மாதம் மாதிரி ஆனது. வெயில் நெருப்பாய் கொளுத்தியது. மரங்கள்; இலைகளை உதிர்த்தன. சிறுசெடிகளும் புற்களும் பொசுங்கிப்போக ஆரம்பித்தது.
“இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும் இந்த தேனீக்கள் இங்கு ?” என்று நினைத்துக் கொண்டே தோட்டத்துக்குப் போனேன். மருந்துக்குக்கூட ஒரு தேனி இல்லை. அந்தக்கூடு காலியாக இருந்தது.
(எங்கள் அபிராஜ் தோட்டத்தில் கட்டிய மலைத்தேனி கூடுதான் என் கையில் இருப்பது. ஏவ்வளவு பெரியது ?)