Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, February 4, 2016

முதலில் நம்பிக்கை வேண்டும் - பேச்சு

முதலில் நம்பிக்கை வேண்டும்

(மகளிர் குழுக்களிடையே  பேசியது)

பேச்சு 

      கையில் ஒரு நயா பைசாக்கூட இல்லாம ஒரு வசதியான வாழ்க்கைய உருவாக்கிக்கொள்ள முடியுமா முடியும். அதப்பத்தித்தான்  நான் இப்போ உங்கக்கிட்ட பேசப்போறேன்.

      வெறுங்கையில முழம்போட முடியுமா எல்லோரும் முடியாதுன்னு சொல்லுவாங்க. நான் சொல்றேன் முடியும். அதப்பத்தித்தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.

      மேயப்போறமாடு  கொம்புல புல்ல கட்டிக்கிட்டு போகுமா போகாது. கரெக்டா சொல்லுவீங்க.  ஏன்னா அது மாடு. அதுக்கு ஐந்து அறிவு. நம்மைவிட ஒரு அறிவு கம்மி.

      கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓரு இளைஞனை சந்தித்தேன். எங்ககிட்ட மரம் வாங்க வந்தார். அவுங்க அப்பா செங்கல் சூளை வைத்திருந்தார். மிஞ்சிமிஞ்சி போனா இருவத்தி அஞ்சி வயசுக்கு மேல தாண்டாது. கருப்பா இருந்தாலும் நல்ல களையான முகம்.

      'தம்பி என்ன படிச்சிருக்கீங்க ?"  அப்படீன்னு கேட்டேன்.

      'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்"  அப்படீன்னார்.

      'டிpகிரியா  டிப்ளமாவா  ?"  

      'டிகிரி சார் முடிச்சி மூணு வருஷம் ஆச்சி" 

      'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க ?"

      'அப்பாவுக்கு உதவியா இருக்கேன். செங்கல்சூளை வேலை எல்லாம் அத்துப்படி சார்"

      'வேலைக்குப் போகலையா ?"  அப்படீன்னேன்.

      'யர்ர் சார் குடுக்கறாங்க ?" 

      பத்துவருஷத்துக்கு முன்னால இருந்ததைவிட இப்பொ  10 மடங்கு வேலை வாய்ப்பு அதிகம். உள்ளுர்லயும் வேலை கிடைக்குது. வெளி நாட்டுலேயும் வேலை கிடைக்குது. இன்னக்கி 100க்கு 50 குடும்பத்து பிள்ளைங்க வெளிநாட்டுல  வேலை பார்க்குதுங்க.

      தன்முனைப்பு வேணும். முயற்சி வேணும். தானா எதுவும்  வருமா வராது. தேடிப் போகணும். நடந்த காலுக்கு சீதேவி. தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறது பைபிள்.  எதுவும் கேட்டாத்தான் கிடைக்கும்.

      'அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று  அலட்டிக்கொண்டார். தூங்காதே தம்பி தூங்காதே" எம்.ஜி.ஆர். பாடுவார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதின பாட்டு.

      வேலையத்தேடி நாமத்தான் போகணும். வேலை நம்மத் தேடி வராது.

      'எப்படியாவது என்னை இன்ஜினியரா ஆக்கணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். கடனை உடனை வாங்கி என்னை படிக்க வச்சார். கொஞ்சமா இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை கூட வித்து என்னை படிக்க வச்சார். படிச்சேன். பட்டம் வாங்கினேன். ஆனா வேலை வாங்க முடியலை" அந்த தம்பி சொன்னது இன்னும் என் காதுல ஒலிக்குது..

      படிப்பு ஒரு ஆயுதம். படிப்பு ஒரு கருவி. படிப்பு ஒரு வரம். அதைப் பயன்படுத்தத் தெரியணும். அப்பதான் அதனோட பயன் நமக்குக் கிடைக்கும்.

      அதனால படிச்சா மட்டும் போதாது. அதை பயன்படுத்தத் தெரியணும். படித்தால் மட்டும் போதுமா அப்படீன்னு ஒரு சினிமாக் கூட வந்தது.

      மகளிர் குழு உறுப்பினர்களுக்கு லோன் தர்றாங்க. அதனால முன்னுக்கு வந்தவங்க பல ஆயிரம்பேர். அதை வாங்கினவங்க சரியா பயன்படுத்தினா எல்லோருமே முன்னுக்கு வரலாம். வர முடியும்.

      ஆனா நாம என்ன செய்யறோம் ஒரு 10,000 ரூபா கையில கிடைத்த உடனே டூர் புரொக்ராம் போடுவோம். திருப்பதிக்கு டூர். குடும்பத்தோட திருப்பதிக்கு டூர் புரொக்ராம்.

      புருஷன் பொண்டாட்டி , புள்ளைங்க நாலு பேர். மொத்தம் ஆறு டிக்கட். ஒடனே இந்தம்மா அம்மாவுக்கு போன் போடுவாங்க.

      'அம்மா குழுவுல சுயதொழில் தொடங்க  10,000 ரூபா குடுத்துட்டாங்க கையில பணம் வந்தாச்சு. ஞாயிற்றுக் கிழமை நாங்க குடும்பத்தோட, திருப்பதி போறோம்'

       'ஆமாம் எனக்கும்கூட வேண்டுதல் இருக்கு. நான் எங்கப் போகப் போறேன் ?"

      'அதுக்குத்தான் ஒனக்கு போனைப் போட்டேன்.  சரின்னு சொல்லு ஒனக்கும் அப்பாவுக்கும் சேர்த்து டிக்கட்டை போட்டுடறேன்.."

      'சரிம்மா  உன்னைமாதிரி பிள்ளைங்க மனசு வச்சாத்தான் எங்களமாதிரி கிழடு கட்டைங்க கோயில் குளம் ன்னு சுத்திப் பார்க்க முடியும்"

    “சரிம்மா ஞாயிற்றுக் கிழமை காலம்பற 8  மணிக்கு முன்கூட்டியே கிளம்பி வந்துடு. அப்பாக்கிட்ட சொல்லும்மா

      'இப்போ குடும்ப டூர்  எட்டுப்பேர் ஆச்சி. அப்புறம் வீட்டுக்காரர் டடூட்டி முடிஞ்சி வந்தார். பக்குவமா சொன்னாங்க. ஏங்க 8 டிக்கட்டுக்கு சொல்லிட்டேன். உங்க மாமனார் மாமியார் வரன்னிட்டாங்க. அதான் எங்கப்பாவும் அம்மாவும்.

    உடனே அவர்; சொன்னார். 'உன் மாமனார் மாமியார்கூட வரன்னிட்டாங்க. அதான் எங்கப்பாவும் அம்மாவும். பத்து டிக்கட்டா சொல்லிடு"

      ஆக பத்து பேர். திருப்பதி போயி மொட்டை அடிக்கிறது. கன்பர்ம்டு. டூர் போயிட்டு, திரும்பி ஊர் வந்து, பஸ்ஸைவிட்டு இறங்கின உடன் கணக்குப் பண்ணா, சிறு தொழில் செய்ய வாங்கின கடன் பத்தாயிரமும் பணால்.

      இதே மாதிரி இன்னொரு அக்காவும்; கடன் வாங்கினாங்க. இதே பத்தாயிரம் தான். தன் கையிலிருந்து ஒரு பத்தாயிரம் போட்டாங்க உள்கடன் ஒரு அஞ்சாயிரம் வாங்கினாங்க, மொத்தம் இருவதினாயிரம் சேர்த்து ஜெர்சிகிராஸ் மாடு வாங்கினாங்க. காலையில 10 லிட்டர் சாயஞ்காலம் 10 லிட்டர் பால் கறக்குது. ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால். ஒரு லிட்டர் பால் 30 ருபாய். அப்போ ஒரு நாளைக்கு 600 ரூபாய் வருமானம். 300 ரூபாய் செலவு போக 300 ரூபாய் லாபம். அப்போ 30 நாளைக்கு ஒரு மாசத்துல 9000 ரூபாய் லாபம்.

     இப்போ சொல்லுங்க. யார் இந்த கடனை ஒழுங்கா திருப்பி கட்டுவாங்க ? மொட்டை போட்ட அக்காவா ? மாடு வாங்கின அக்காவா

      10 மாசத்துல அந்த கடன் அடைஞ்சி போச்சின்னா மாடும் கன்றுக்குட்டியும், அவுங்களுக்கு சொந்தம். குடும்பத்தோட மொட்டை அடிச்சவங்களோட நிலைமைய யோசிச்சிப் பாருங்க. பத்து மொட்டை   மட்டும்தான் மிச்சம்.

      அவுங்க குடும்பத்தோட மொட்டை அடிச்சவங்க. மொத்தம் பத்து பேரு. ஆனா அவங்ககூட போகாமலே ஒருத்தர் மொட்டை அடிச்சிகிட்டார். அது யாரு சொல்லுங்க பார்ப்போம் ? நீங்க சுலபமா சொல்லிடுவீங்க. அவுங்களுக்கு யாரு லோன் வாங்கிக் கொடுத்தாரோ அந்த அப்பாவிதான்.

      ராமனால தனக்கு ஏற்படக்கூடிய அழிவை நினைச்சி மனசு கலங்கி நின்றான் ராவணன். அது எப்படி இருக்குன்னா கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்  இலங்கை வேந்தன் ! அப்படீன்னு எழுதுவார் கம்பர்,

      ஆனா இப்போ கம்பனை எழுதவிட்டால், அதையே மாத்தி எழுதிடுவார்.  எப்படி ?

      கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.

      ஆனா இதனால யாருக்கு நஷ்டம் ?   யோசிச்சி பாக்கணும்.  மொட்டை அடிக்க கடன் கொடுத்தவருக்கா ? மொட்டை அக்காவுக்கா ?

      2003 வது வருஷம், நான் அய்த்ராபாத்  போயிருந்தேன். அங்க 'மேனேஜ்" அப்படீன்னு பயிற்சி மையம். வாட்டர்ஷெட் பயிற்சிக்காக போய் இருந்தேன். கிட்டதட்ட 30—40 பேர் அந்தப் பயிற்சியில் கலந்துகிட்டோம். இந்தியாவில் இருக்கும், எல்லா மாநிலத்திலிருந்தும் வந்திருந்தாங்க.

      ஒரு நாள் வைறதராபாத்திலிருந்து, ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு கிராமத்தில் ஒரு மகளிர் குழுவுக்கு, கூட்டிகிட்டு போனாங்க. பத்து பதினஞ்சி பெண்கள் இருந்தாங்க. அவங்களோட பேசி, அவங்களப்பத்தி தெரிஞ்சிக்கீங்க. அப்படீன்னு சொன்னாங்க.

      நாங்க மாறி மாறி கேள்வியா கேட்டோம். எப்போ உங்க குழுவை தொடங்கனீங்க ? எத்தனை உறப்பினர்கள் இருக்காங்க? எல்லாத்துக்கும் சளைக்காம பதில் சொன்னாங்க.

      'ஒரு வருஷத்துல 2 ½ கோடி ரூபாய்க்கு உங்க குழு மூலமா டெண்டர் எடுத்து  வேலை செய்ததா சொன்னாங்க. என்ன வேலைகள் எடுத்து செய்தீங்க ?"

      'பள்ளிக்கூடம் கட்றது , சத்துணவுக்கூடம் கட்றது , ரோடு போடறது அந்த மாதிரி வேலைகள் எல்லாம் எங்க குழு மூலமா எடுத்து செய்யறோம்"

      இதைக் கேட்டதும் நாங்களெல்லாம் அசந்து போயிட்டோம். யோசிச்சி பாருங்க. ஒரு சாதாரண மகளிர் குழு இரண்டரை கோடி ரூபாய்க்கு வேலை எடுத்து செஞ்சிருக்காங்க. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல. இரண்டரை கோடி.

      அதைவிட எங்ககூட வந்திருந்த இன்னொருத்தர் ஒரு கேள்வி கேட்டார். சிலபேர் எப்பவுமே ஏடாகூடமாக கேள்வி கேட்பாங்க. அதுக்கு அவங்க சொன்ன பதில் டாப்கிளாஸ். நாங்க எல்லோருமே ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டோம்.

      ஏம்மா ரோடு போடறோம் பில்டிங் கட்றோம்ன்னு சொல்றீங்களே உங்கள் குழுவில் யாராவது இன்ஜினியர் இருக்காங்களா அப்படீன்னு கேட்டார் ஒருத்தர்.

      உடனே அந்தம்மா எதிர்க்கேள்வி கேட்டது.

      'சார் உங்க வீட்ட யார் கட்டினாங்க ?"

      'கான்ட்ராக்டர்கிட்ட விட்டோம். அவர்தான் கட்டினார்" என்றார்.

      'அதுமாதிரிதான் நாங்க கட்டடம் கட்றதும், ரோடு போடறதும்" என்று நெற்றிப்பொட்டில் அடிச்ச மாதிரி சொன்னதும், கொஞ்ச நேரம் நிசப்தமா இருந்தது.
      அதற்குப் பிறகு இவர் எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. அதற்குப்பிறகும் அந்தம்மாவே தொடர்ந்து பேசினாங்க.

      'நீங்க நெனைக்கறது சரிதான். நாங்க யாரும் அஞ்சுக்கு மேல படிக்கல. ஆனா எங்க குழு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அரசாங்க அதிகாரிங்க எங்கள நம்பறாங்க. எங்கக்கிட்ட வேலைகொடுத்தா சிறப்பா முடிச்சித் தருவாங்கன்னு நம்பறாங்க. உண்மைய சொல்றதுன்னா எங்களுக்கு வர்ற வேலைய தராதரம் பார்த்துதான் நாங்க எடுத்துக்கறோம்"

      எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அப்போ இன்னொரு கேள்விய கேட்டார் ஒருத்தர். 'உங்ககுழுவை சிறப்பா வளர்த்திருக்கீங்க. உங்க குடும்ப வருமானம் அல்லது உங்க குடும்பம் எல்லாம் எப்படி வளர்ந்திருக்குன்னு  தெரிஞ்சிக்கலாமா ?"

      இந்தக் கேள்வியைக் கேட்டதும், அந்தம்மா முகத்துல ஒரு சந்தோஷம் தெரிஞ்சது. சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க.

      'எம்பையன் லண்டண்ல டாக்டருக்கு படிக்கிறான். இந்த அம்மா இருக்காங்களே இவங்கதான் எங்கள் குழு பிரதிநிதி.  அவுங்க பொண்ணு அமெரிக்காவுல வேலை பாக்குது" என்று சொன்னதும், நாங்கள் ஆச்சரியத்துடன் அவர்களை மனதார பாராட்டினோம்.

      கடைசியா அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்படும்போது அந்தம்மா சொன்னாங்க. உங்க ஊர்ல எல்லா குழு பெண்கள்கிட்டயும் சொல்லுங்க.

'நாம வளர முடியும். நாம சம்பாதிக்க முடியும்ங்கற நம்பிக்கை இருந்தா போதும். எல்லா குழுக்களுமே எங்களைவிட நல்லா பெரிசா வளரமுடியும்"

     அவுங்க சொன்ன மாதிரி நீங்க கூட வருஷத்துக்கு 2 ½ கோடி இல்ல, அஞ்சு கோடிக்கு கூட வேலை பாக்கலாம். உங்க குழந்தைகளையும் வெளி நாடுகள்ல படிக்கவைக்க முடியும்.

      உங்க குழந்தைகளையும் நீங்க அமெரிக்காவுல படிக்க வைக்கலாம். ஆஸ்திரேலியாவுல படிக்க வைக்கலாம். லண்டன்ல படிக்க வைக்கலாம். ரஷ்யாவுலகூட படிக்க வைக்கலாம். ஏன் உலகத்தின் எந்த பகுதியிலேயும் படிக்க வைக்கலாம்.

      உங்களுக்கு வேண்டியது எதுன்னா நம்பிக்கை. அதுமட்டும்தான். நம்பிக்கை  நம்பிக்கை  நம்பிக்கை.

தொழில் தொடங்க முதலில் தேவை முதலா ? நம்பிக்கையா ? இப்பொ சொல்லுங்க.

      முதலில் நம்பிக்கை இருந்தால் போதும். முதல் தானாக வரும். ஆக இப்போது உங்களுடைய தேவை, நம்பிக்கை ! நம்பிக்கை ! நம்பிக்கை !

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எழுத்தாளர், குறும்பட இயக்குனர், சமுக ஆர்வலர், சுயமுன்னேற்ற பயிற்ச்சியாளர், இயற்கை விஞ்ஞானி என பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று வலம்வரும் திரு. தேவ. ஞானசூரியபகவான் அவர்களின் இந்த வலைப்பூ ஒரு மிகச்சிறந்த தகவல் களஞ்சியமாக இருக்கிறது. இவரின் ஒவ்வொரு படைப்புகளையும் படிக்கும்போது அப்படைப்பு சம்மந்தமான உயர்த்தரமான தகவல்களை அறிந்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல் பல்வேறு துறைகள் சாரந்த தகவல்களையும், அறிவுகளையும், புதிய வார்த்தைகளையும் ஒரே படைப்பில் கற்றுக்கொள்ள முடிகிறது. இவரின் படைப்புகளை ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை தோற்றுவிக்கிறது. இவரின் மொழிநடை மிகவும் அருமை. இந்த வலைப்பூவை படிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் அனைவருமே அதிஷ்டசாலிகளே! இளைய சமுதாயத்தினர் இந்த அறிஞரின் அனுபவங்களை ஆக்க முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் மிகச்சிறந்த அளவிற்கு உயரலாம் என்பது நிச்சயம். இந்த வலைப்பூவை படிக்க வாய்ப்பு கிடைத்த்தற்கும் இயற்கை விஞ்ஞானி திரு. தேவ. ஞானசூரியபகவான் சமகாலத்தில் வாழ்கிறோம் என்பதும் எமக்கு பெருமை அளிக்கிறது. இவரின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவோம். நன்றி! KARTHIBAN HARIKRISHNAN, INFORMATION SCIENTIST, CHENNAI

    ReplyDelete