Select Your Favorite Topic! Enjoy Reading!!

Tuesday, March 8, 2016

தரைமீன்கள்

தரைமீன்கள்

(என் நினைவு சரியாக இருந்தால், 1980 வாக்கில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை. வேகமாக ஓடும் ரயிலில் தொடங்கும் இந்த கதையும் அப்படியே ஓடும், படித்துப் பாருங்கள். இன்னும்கூட ராமு கோனார் என் கண்களை கசிய வைக்கிறார்.)

      பதட்டத்துடன் கக்கூஸ் கதவை திறந்துக்கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி இருபுறமும் பார்த்தார் ராமுகோனார். யாரும் வரவில்லை. மெதுவாக நடந்துகொண்டிருந்தது சென்னை செல்லும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில். சட்டென்று கதவை மூடினார்;. மின்னலென கதவை திறந்துக்கொண்டு ரயிலிலிருற்து பந்தாக எம்பிக் குதித்தார்.

      ரயில்வே லைனுக்கு பக்கத்தில் கொட்டிவைத்திருந்த கருங்கல் ஜல்லிக் குவியலின் மீது கால் இடறி ஜல்லிகள் சரிய உருண்டார். ஒரு காலிலிருந்த செருப்பு இறக்கை முளைத்து எங்கோ பறந்தது. வேஷ்டி ஒரு பக்கம் அவிழ்ந்துவிழ, ராமுகோனார் கோவணத்துடன் எழுந்து நின்றார்.

      எங்கும் இருட்டு குடைபிடித்திருந்தது. ரயில் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த வினாடி வேஷ்டியை கையிலெடுத்துக் கொண்டு எஞ்சியிருந்த ஒற்றை செருப்பை உதறிவிட்டு ரயில்ரோட்டிலிருந்து இறங்கி தலைதெறிக்க ஓடினார். வண்டிப்பாதையில் இருள் வழிந்தது. சீத்து பூத்தென்று மூச்சு வாங்கியது. லேசாக இருட்டில் கண் தெரிய ஆரம்பித்தது.

      வண்டிப்பாதையிலிருந்து கிளைத்துச் சென்ற கொடிப் பாதையில் திரும்பி ஓடினார்;. நாணல் புதர்கள்…. இருட்டில் அடையாளம் தெரியாத செடிகள் கொடிகள். ஒரு வாய்க்கால்… முட்டியளவு தண்ணீர்…     முள்வேலி…. சிறுவழி…. தொடர்ந்து வயல்வரப்பு…. அறு வடைசெய்த நெல் வயல்.  புதிதாக அறுவடைசெய்த தாள்கட்டைகள் கால்களை சல்லடையாக்கின…. கோனார் சளைக்காமல் ஓடினார்.

      மூச்சு வாங்கியது. வயிற்றை இடதுபுறமாக இழுத்துப் பிடித்தது. இனி அவ்வளவு வேகமாக ஓட முடியாதது போல் தளர்ச்சி. உடல் முழுவதும் வியர்வை நெடி. நெற்றிப்பொட்டில் வழிந்த வியர்வை கண்களில் எரிந்தது. எஞ்சியது வாயில் உப்புக் கரித்தது.

      பக்கத்தில் எங்கும் ஊர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ரயில் நிற்கிறதா என்று பார்த்தார். தூரத்தில் கடைசிப்பெட்டி இருட்டில் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் செய்தபடி போய்க்கொண்டிருந்தது.

      வேஷ்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டார்;. கையில் இருந்த செயினைப் பார்த்தார். பத்துப் பவுனுக்கும் குறையாது. மடியில் வைத்துக் கொண்டார். சுற்றிலும் பார்த்தார். இருட்டின் ராச்சியம். சிள் வண்டுகளின் இறைச்சலில் அங்கு நிலவிய மௌனம் கிழிபட்டது. எங்கோ தூரத்தில் நரிகள் கும்பலாக சந்தோஷமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. சுற்றிலும் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வாயடைத்து நின்றிருந்த மரங்களில் மினுக்கட்டாம்பூச்சிகள் ரேடியத் துண்டுகளாய்; ஜ்வலித்தன.

      மெதுவாக நடக்க ஆரம்பித்தார். ஓடி வந்தது ஆறேழு மைல் இருக்குமோ…? என்று கணக்கிட்டார்.; இனிமேல் ஒரு எட்டுக்கூட வைக்க முடியாது என கால்கள் மக்கார் செய்தன. கெண்டைக்கால் சதை இறுகிப் போயிருந்தது. இடுப்பிலிருந்து கால்கள் தொடையோடு கழண்டுப் போவதைப் போன்ற வலி. பாதங்களில் எரிச்சல். இன்னும்கூட மனசு எக்ஸ்பிரஸ் ரயிலாக ஓடிக்;கொண்டிருந்தது.

      ராமுகோனார் இப்போது ஒரு கரும்புத் தோட்டத்தில் இருந்தார். இதற்கு மேல் நடப்பது சாத்தியப்படாது என்ற முடிவுடன் கரும்புத் தோட்டத்தில்  வரப்பில் ;உட்கார்ந்தார். அப்படியே படுத்தால் என்ன…?  வரப்பில் தலைவைத்து சாய்ந்தார்.

      கண்களில் கால்வைத்து இறங்கியது தூக்கம். சாக்குருவி ஒன்று எஙகிருந்தோ கத்தியது. சிறிது நேரத்தில் ராமுகோனாரின் குறட்டையொலி கரும்புத் தோட்டத்தில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

      திடுக்கிட்டு விழித்தார் நன்றாக விடிந்திருந்தது. எழுந்து உட்கார்ந்தார். கரும்புத் தோட்டத்துக்குப் பக்கத்தில் பெரிய இலுப்பை மரம் ஒன்று தெரிந்தது. இலுப்பை மரத்திற்கு மேல் கிளிகள் சரஞ்சரமாக தோரணங்கட்டிப் பறந்தன. இலுப்பை பூக்களின் வாசனை மனசைக் குமட்டியது.

      தொபீர் என்று ஓரு சப்தம்…   ஓடிவிடலாமா…? கலவரப்பட்டார் கோனார்.  அவசரப்படக்கூடாது. யாராவது தேடிக்கோண்டு வருகிறார்களோ…?  இங்கு படுத்திருக்கக் கூடாது. கோனார் கருப்பங்கால்களில் ஊர்ந்து செல்ல, கரும்பு சோலைகள் சரசரத்தது. பயந்துபோய் ஒருகணம் ஜடமாக இருந்தார்.

      இமைகளின் அசைப்பை நிறுத்தி காதுகளை கூர்மையாக தீட்டிக் கொண்டார். தண்ணீர் அலம்புவதைப் போன்ற ஒரு சப்தம். சப்தம் வந்த திசையில் உற்று கவனித்தார். தொடர்ந்து சப்தம்…. அதோ கிணறு அங்குதான் அந்த சப்தம். யாராவது குளிக்கிறார்களா…? இருக்கும். இந்த கிணற்றை பார்த்தால் புழக்கத்தில் இருக்கும் கிணறு மாதிரி இல்லை. புதிதும் இல்லாமல் பழையதும் இல்லாமல் இருந்தது. எப்பவோ என்ஜின் வைத்து தண்ணீர் இறைத்திருக்கும் தடங்கள் எண்ணெய் சிந்தி கறைபடிந்த அழுக்கேறின மணற்திட்டுக்கள்.

     யாராவது கிணற்றில் விழுந்து விட்டார்களோ…? தற்கொலை செய்து கொள்ள…. அடுத்த வினாடி கோனார் எழுந்து கிணற்றின் அருகே  பூனையாகி எழுந்து போனார்;. ஆமையாகி எட்டிப்பார்த்தார்.

     சின்னவயசுப் பெண்ணொருத்தி கிணற்றில் அமிழ்ந்து கொண்டிருந்தாள். கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள் யோசிக்க நேரமில்லாமல் கிணற்றில் குதி;த்தார் கோனார்.

      கோனார் சட்டையைப்; பிழிந்து காயப்போட்டார் . அவள் புடவையை சரிசெய்துக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட நின்றுக் கொண்டிருந்தாள்.

      ஏம்மா … எல்லாரும் கஷ்டம் இல்லாமலா இருக்காங்க…? அதுக்குப்போயி தற்கொலை பண்ணிக்கலாமா…? சின்ன வயசா இருக்க... போம்மா  போ…  எல்லாத்தையும் அனுபவிச்சுத்தான் போவணும்… கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பின்னாலயும் தாய் ஊட்ல சீருசெட்டு செய்யலன்னு புருஷங்காரனே கொடுமை பண்றது முட்டாள் தனந்தா…  என்ன பண்றது…? கோனார் புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார் அவருக்கு  அவள் லட்சியம் செய்ததாகவும் தெரியவில்லை, அலட்சியம் செய்ததாகவும் தெரியவில்லை…ஆனால்  ஊமையாக அழுதுகொண்டே இருந்தாள். சிறிது நேரத்திற்கு பின்னர் அவள் ஒருவழியாய்ப் போய்ச் சேர்ந்தாள்.

      நனைந்து போன வேஷ்டியை அவிழ்க்க மடியில் கை வைக்க பகீரென்றது.செயின் காணவில்லை வேஷ்டியை அவிழ்த்து உதறினார். கிணற்றை சுற்றிலும் பார்த்தார். படுத்திருந்த இடத்தில்… வரப்பு ஓரத்தில்.,மறைந்திருந்த இடத்தில் -எங்கும்இல்லை… எல்லா இடத்திலும் தேடியாயிற்று. ஒருவேளை கிணற்றில் விழுந்திருக்குமோ…?

      கோனார் கிணற்றை எட்டிப் பார்த்தார். தண்ணீர் தெளிவாக இருந்தது. ஆழம் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக கிணற்றுக்குள்தான் விழுந்திருக்கும். சந்தேகமில்லை.

      கோனாருக்கு பழைய நினைவுகள் நிழலாடின. சின்ன வயசில் கிணற்றில் கல்லைத்தூக்கிப் போட்டு,  பந்தயம் கட்டி உள்ளே குதித்து எடுத்து வந்தது எல்லாம் அவருக்குப் பசுமையாக இருந்தன. அந்தப் பகுதியில் ராமுகோனார் இறங்கி, மண்எடுக்காத கிணறுகள்  இல்லை எனலாம். இப்போதுகூட கிணற்றில் வாளி குடம் விழுக்து விட்டால் ராமுகோனாரைத்தான் தேடுவார்கள் ஊரில்.

      வேட்டியை வளைத்து தாழ்பாய்ச்சி கட்டிக் கொண்டு. கிணற்றில் குதித்தார்;. குதித்த வேகத்தில் கொஞ்ச தூரம் போய். அதன் பின்னர் தலைகீழாக திரும்பி, கால்களை  மேற்புறம்; உதைத்து திரும்பி நீந்தினார்.

       செயின் கிடைத்துவிட்டால் ராமுகோனாரின் இரண்டாவது மகள் லட்சிமியின் திருமணம் கோலாகலமாக நடக்கும். இன்னும் இரண்டு நாட்களில் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். இந்த வரன் விட்டால் லட்சிமிக்கு கல்யாணம் நடப்பது கஷ்டம்தான். பெரிய மகள் கல்யாணத்திற்கு இருந்த அரைகாணி நிலம் கைகொடுத்தது. எப்படியும் இந்த கல்யாணம் நின்றுவிடக்கூடாது என்ற நப்பாசையில்தான், வசதியாக திருச்சியில் இருக்கும் தன் தம்பியின் ஞாபகம் வந்தது. தம்பி மனசு வைத்தால் கல்யாணம் நடக்கும். சின்ன வயசில் தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்த தம்பி. உதவி செய்யாமலா போய்விடுவான்..? இந்த நம்பிக்கையில்தான் கோனார், நூறு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு திருச்சி போனார். வாய்வார்த்தைகூட பேசாத தம்பியை நினைத்து நினைத்துப் பார்த்தார். சொந்த பந்தமெல்லாம் சுத்த பித்தலாட்டம். என்று நினைத்தபடி திருச்சியிலிருந்து ரயிலேறினார். மீண்டும் கால்களை உதைத்து கைகளை உள்ளே இறக்கி ஆவேசமாக தண்ணீரை மெல்ல தள்ளினார். தரை கைகளில் தட்டுப் பட்டது. கொழ கொழவென சேறு… கரிப்பம்பட்டைகள்… பாசிப்படர்ந்த கற்கள். ஓடுகள், உடைந்த நசுங்கிய வாளி மங்கலாகத் தெரிந்தன, கண்களை அகலமாக விரித்துப் பார்த்தார். கைகளை கீழே தரையில் ஊன்றி கால்களை மெதுவாக தரை மட்டத்தில் ஊர்ந்துசென்றார். எங்கேயாவது பளபளவென்று தெரிகிறதா என்று அவசர அவசரமாக அவர் கண்கள் தரையில் மெய்ந்தன. நெஞ்சில் அடைத்திருக்கும் காற்று நாசித் துவாரங்களிலும், வாயின் வழியாகவும் தப்பிக்க பகீரதப் பிரயத்னம் செய்யத் துவங்கியது. மீண்டும் எச்சிலைக் கூட்டி விழுங்கி நாக்கை மேல் அன்னத்தோடு அழுத்தி மூச்சை அடைத்தார். காது ஜவ்வுகளில் ஒரு அழுத்தமான வலி.

     ரயிலில் வந்த கிழவியின் முகம் மனசில் நெருடியது. கக்கூஸ_க்கு போய்விட்டு கதவோரமாக நின்றிருந்ததும், அந்த நேரம் பார்த்து கழுத்து .காது, மூக்கு, எல்லாம் நகைகள் காய்த்து குலுங்க, கக்கூஸ_க்குள், கோனாரின் மனசில் சின்ன சபலத்தை, உண்டுபண்ணிவிட்டு, கிழவி நுழைந்ததும், அடுத்த கணமே கோனார்போட்ட திட்டப்படி, காத்திருந்து கக்கூஸ் கதவு மீண்டும் திறந்த போது கிழவியை சட்டென்று தள்ளிக் கொண்டு;, கதவை தாழிட்டதும், உடன் அவள் வாயில் துண்டை அடைத்து செயினைக் கழட்டிக் கொண்டு ரயிலிலிருந்து குதித்ததும் கனவுகளாகத் தெரிந்தன.

      ஒருவேளை கிழவி மூச்சடைத்து செத்துப் போயிருப்பாளோ..? இருக்காது. செத்திருக்க மாட்டாள். சாகக்கூடாது. கல்யாணம் நின்றுவிட்டால், கிணற்றில் விழுந்த பெண் மாதிரி, லட்சிமியும் ஒருவேளை சே… சே… இன்னும் இரண்டு நாளில் மாப்பிள்ளை வீட்டார் கோனார் வீட்டுக்கு வருவார்கள். இப்போது. காது ஜவ்வுகளில் வலி அதிகரித்தது. கண்கள் பிதுங்குவது போன்ற ஓரு உணர்வு. பாதிக்கு மேல் பார்த்தாகிவிட்டது. இன்னும் கொஞ்சம்தான். அநேகமாக இந்தப் பக்கம் தான் கிடக்கும். குதி;க்கும் போதே அந்தப் பக்கமாக குதித்திருக்க வேண்டும். செயின் கிடைத்து விட்டால் ஒரே உதையில் வெளியே வந்துவிடலாம். கைகளை நீட்டி கரையை தூரத்தில் பற்றி உடலை குறுக்கி, கால்களை இழுத்து ஊர்ந்து சென்றூர். தெளிவாகத் தெரிந்த கிணற்றின் அடிப்பரப்பு… ஓடுகள்…பீங்கான்…. உடைந்த ஜாடி… அனைத்தும் இப்போது மங்கலாகத் தெரிய ஆரம்பித்தன. கண்கள் மையம் பூப்பது போல்… காது ஜவ்வுகள் கிழிவது போல்… இருந்தது. கோனாரின் பார்வையிலிருந்து கிணற்றின் அடிப்பரப்பு வெகுதூரத்திற்கு தப்பிச் சென்றது. இப்போது முழுமையாக மறைந்துவிட்டது. இப்போது கோனாரின் கைகளும் கால்களும் நிதானமாக ஓய்வெடுத்துக் கொண்டன. நாசித்துவாரங்களிலிருந்து, வேகத்துடன் வெளியேறிய காற்றுக் குமிழிகள் நீர்ப்பரப்பின் மேல் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்து உடைந்து கொண்டேயிருந்தன.
                    

No comments:

Post a Comment