இத்தினூண்டு காற்றையும் அதிகமான விஷ வாயுக்களையும் அன்றாடம் சுவாசிக்கிறோம்.
“சரி” என்று யோசிக்காமல் சொல்லுவார்கள், சர்க்கரை ஆலை, மற்றும் தோல்தொழிற்சாலைக்கு பக்கத்தில் வசிக்கும் பாவாத்மாக்கள்.
காற்று என்றால் என்ன ? பல வாயுக்களின் சங்கமம். இதில் அதிகம் இருப்பது நைட்ரஜன். அதாவது 70 சதவிகிதம். ஆக்சிஸன் 21 சதவிகிதம். ஆர்கான், கார்பன்டைஆக்ஸைடு, நியான், ஹீலியம், கிரிப்டான், சினான் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம், ஒரு 9 சதவிகிதம் இருக்கு. ஆக காற்று என்பது வாயக்களின் கூட்டமைப்பு.
வாழ்க்கை பாதுகாப்பா இருக்கணும்னா மூன்று விஷயங்கள்ல நாம் கவனமாக இருக்கணும். நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று.
சரி, என்ன சேர்ந்தால் காற்று மாசடையும் ? என்னவெல்லாம் காற்றுடன் சேர வாய்ப்புண்டு ?
கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு ட்ரை குளோரோ எத்திலீன், பார்மால்டிஹைடு, பென்சீன், அசிட்டோன், ரேடான், அம்மோனியா, சைலீன் இப்படி ஒரு பெரிய பட்டியல் இருக்கு. இவை எல்லாம் காற்றோடு சேரும் கருப்பு ஆடுகள்.
இவற்றை எல்லாம் நாம் சுவாசிக்கறதாலதான் ஊருபேரு தெரியாத நோய்கள் எல்லாம் வருது.
மின்விசிறிகள், ஏர்கூலர்கள், ஏர்கண்டிஷனர்கள் எல்லாம் நமக்கு காற்று வழங்கும் கருவிகள்.இவை எல்லாமே இருக்கும் காற்றை எடுத்து வீசி விநியோக வேலை மட்டுமே பார்க்கும், அவற்றை சுத்தப்படுத்திக் கொடுக்குமா ? கொடுக்காது. “அது என் வேலை இல்லை… சாரி” என்று சொல்லிவிடும்.
ஏற்கனவே நம்மைச்சுற்றி இருக்கும் காற்று நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை அப்படியே எடுத்து விசிறுவதுதான் அவற்றின் வேலை.
சரி, வீட்டின் வரவேற்பரை, தூங்கும் அறை, வேலை பார்க்கும் அறை, சமையல்அறை, குளியல்அறை, சேமிப்பு அறை, தேவையில்லாத பொருட்களை கொட்டிவைக்கும் அறை, இப்படி வீட்டின் பல பகுதிகளில் அசைய வழியில்லாமல் அடைபட்டுக் கிடக்கும் காற்றை சுத்தம் செய்து கொடுக்க ஏதாவது கருவி உள்ளதா ?
கருவிகள் இல்லை, ஆனால் இந்த சித்து வேலையை செய்ய சில அபூர்வமான செடிகள் உள்ளன.
காற்றில் உள்ள நச்சு வாயுக்களை வடிகட்டும் வேலை பார்க்கின்றன இந்த அரிய வகைச் செடிகள்.
இவற்றை காற்று சீர்திருத்திச்செடிகள் என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் ஏர் பியுரிஃபையர்ஸ் என்கிறார்கள்.
இந்தச்செடிகள் அறைக்குள் இருக்கும் காற்றினை சுத்தப்படுத்தும். அதாவது தீங்குதரும் நச்சு வாயுக்களை கிரஹித்துக் கொள்ளும். கூடுதலாக ஆக்சிஜனை நிரப்பும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது இரவு நேரத்திலும் அதிகப்படியான ஆக்சிஜனை வெளிவிட்டு ஆச்சரியப்படுத்தும். (தாவரங்கள் இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடும் என்பது எலிமண்ட்டரி ஸ்கூல் பாடம்)
“முதல்ல காற்று சீர்திருத்தி செடிகள் என்னென்னு சொல்லுங்க..மத்ததெல்லாம் நிதானமா சொல்லுங்க..” என்று நீங்கள் அவசரப்படுவது புரிகிறது.
துளசி, மதர்இன்லாஸ்டங், பீஸ்லில்லி, மூங்கில்பனை, ஸ்பைடர்பிளாண்ட், ஜெர்பராடெய்ஸி, கோல்டன் போத்தாஸ் இவைதான் அந்த காற்று சீர்திருத்திச் செடிகள்.
ஏன்ன யோசனை ? முதல்ல ஒரு நாலஞ்சி செடியை வாங்கி வீட்டுக்குள்ள வச்சி நல்ல காற்றை சுவாசிங்க ?
,இந்த செடிகளப்பற்றி விளாவாரியா அடுத்த கட்டுரையில பாக்கலாம். சரிங்களா ?
No comments:
Post a Comment