Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, May 4, 2016

ஆணுக்கு பொண்ணு அட்டியில்ல மட்டமில்லன்னு ஆத்தா சொல்லுது - சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் - பகுதி 2



மாமியாரும் மருமகளும்  (Image Courtesy: Googl

(ஓசோன் பனிக்காற்றாய் வீசும் அதிகாலைப்பொழுது. சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் பொதுவான குறி சொல்லியபடி குறுகலான ஒரு கிராமத்து சாலையில் நடந்து போகிறான். சாலையின் இரு பக்கத்திலும் ஆழ்ந்த உறக்கத்தில்  இருக்கும் கூரை வீடுகள். ஒரு சிலரின்; காதுகள்மட்டும் கோடாங்கியின் குரலுக்காகவும் குடுகுடுப்பையின்  தாள லயத்துக்காகவும்; காத்திருக்கின்றன. அவர்களுக்கு தெரியும் கோடாங்கியின் வாக்கு கோடிப் பொன்னுக்கு நிகர் என்று)  


கோடாங்கி: நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது …
நல்ல காலம் பொறக்குது
அம்மா  தாயி  …

மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே  …
ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே  …

தேவி  ஜக்கம்மா
ராக்கு  சொடலை  …
இருவாச்சி  மதுரகாளி
திருவேற்காடு  கருமாரி
திருக்கடவூர்  அபிராமி
தில்லை  சிவகாமி  …

காஞ்சி  காமாட்சி
கவனமா சொல்லு தாயி  …
காசி  விசாலாட்சி
கருத்தா சொல்லு தாயி  ….
மதுரை  மீனாட்சி
மறைக்காம சொல்லு தாயி  ….
ஜனங்களா கேளுங்க
ஜக்கம்மா வாக்கு இது …
மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது …

இந்த மண்ணு மனையப்பத்திப்
பாத்தேன்
குறையில்ல …
வீடு வாசலைப் பத்திப் பாத்தேன்
குறையில்ல …
இந்த வீட்டுல வாழுமான
கொம்பனப்பத்திப் பாத்தேன்
குறையில்ல …
மனைவி மக்களப்பத்திப் பாத்தேன்
குறையில்ல …
குழந்தை குட்டியப்பத்திப் பாத்தேன்
குறையில்ல …
மழை மாரியப் பத்திப் பாத்தேன்
குறையில்ல …
காடு கழனியப் பத்திப் பாத்தேன்
குறையில்ல …
பயிர்பச்சையப்பத்திப் பாத்தேன்
குறையில்ல …
மாடு கண்னைப் பத்திப் பாத்தேன்
குறையில்ல …
கோழிக் குஞ்சப் பத்திப் பாத்தேன்
குறையில்ல …
நீங்க தொட்டகாரியம் துலங்கும்னு
ஆத்தா சொல்றா தாயி

(ஒரு குடிசையிலிருந்து வயதான பெண்மணியின் கரகரப்பான குரல் கேட்கிறது)

கோடாங்கி   …    கோடாங்கி   …

கோடாங்கி: இருட்டோட இருட்டா  குரல் கொடுக்கறது
ஆரு    தாயி …?

குரல்: என்னக்கோடாங்கி என்னத்தெரியலையா …?  நீ வருவே வருவேன்னு பாத்துபாத்து கண்ணு பூத்து போச்சி …

(அந்த குரலுக்கு சொந்தக்காரர் அஞ்சலை. கோடாங்கிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். கொஞ்சம் விவகாரமான பெண்மணி;)

கோடாங்கி: என்னா சமாச்சாரம்னு சொல்லு தாயி …

அஞ்சலை: கோடாங்கி …ரகசியமா ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் … காதைக் கொஞ்சம் குடு …

கோடாங்கி: அட எங்காது   எனக்கு வேணும் தாயி …எனக்கு இருக்கறதே ரெண்டு காது தாயி  …எக்ஸ்ட்ராவா  இருந்தாலும் குடுக்கலாம். …

அஞ்சலை: அட ரகசியமான விஷயம் கோடாங்கி  …

கோடாங்கி: சும்மா சொல்லு தாயி  …ஆத்தாவுக்கு தெரியாத ரகசியம் என்ன தாயி இருக்குது ஓலகத்துல சொல்லு தாயி …

அஞ்சலை: அது ஒண்ணுமில்ல கோடாங்கி … எம்மருமக முழுகாம இருக்கறா …   ஆஸ்பத்ரிக்குப் போயி சோதனைப் பண்ணி பாத்தா புள்ளை  …ஆம்பளையா  …?   பொம்பளையான்னு தெரிஞ்சிடும்   …   வாடின்னா   வரமாட்டேங்கறா   …


கோடாங்கி: தெரிஞ்சி என்னாப் பண்ணப்போற தாயி   …?

குரல்: ஆம்பள புள்ளன்னா வச்சிக்கிடலாம் …பொம்பள புள்ளன்னா   கலைச்சிடலாம் இல்லையா    கோடாங்கி   …?


கோடாங்கி: நீ  …  என்னா தாயி சொல்ற   …?

குரல்: கோடாங்கி … நீ ஏதாவது வசியமருந்து குடுத்தேன்னு வச்சிக்க  …  எம்மருமக நாஞ்சொல்றத கேப்பா … ஆஸ்பத்ரிக்கு வாடின்னா
வருவா … என்ன சொல்ற கோடாங்கி …?

கோடாங்கி :--மருமகள மசியவைக்க
வசிய மருந்து கேக்கற …
இந்த மாமியாருக்கு
நேரம் சரியில்ல  …
நிலமை சரியில்லன்னு ஆத்தா சொல்லுது  …

கொலை பாதகம்
செய்யறதுக்கு – குறிகேக்கற
இந்த கூனி மாமியாருக்கு  …
கிரகம் சரியில்ல  …நரகம் ரெடின்னு
கருத்தமாரி கறாரா சொல்லுது தாயி  …


அஞ்சலை: என்னா கோடாங்கி  …
எனக்கு சரியில்லேன்னு சொல்ற…?

கோடாங்கி: ஆமா தாயி  … பொம்பள புள்ளையா இருந்தா
கருவை கலைப்பேன்னு … இன்னொரு தடவை சொல்லாத தாயி  …  ஆத்தாளே பொம்பளதான தாயி  …

அஞ்சலை: ஆமா  ஆத்தா பொம்பளதான்  …

கோடாங்கி: ஆத்தாளை   கலைக்கலாமா தாயி  …?

அஞ்சலை: அய்யய்யோ தப்பு கோடாங்கி … தெரியாம கேட்டுட்டேன் கோடாங்கி …

கோடாங்கி: கருவில் இருப்பது
ஆண்குழந்தையா
பெண்குழந்தையான்னு
ஆஸ்பத்திரியில
உள்ள கேட்டாலும்
வெளிய கேட்டாலும்
அடுத்த நிமிஷமே ஜெயில்ன்னு
சட்டம் இருக்குன்னு
திட்டம் இருக்குன்னு
ஆத்தா சொல்றா தாயி

அஞ்சலை: அப்பிடியா கோடாங்கி ?

கோடாங்கி: அதுமட்டுமில்ல..
பொண்ணு  பொறந்தா
பொன்ன   குடுக்கும்
பொருளக் குடுக்கும்
குடும்பவாரிச அள்ளிக் குடுக்கும்…
ஆணுக்கு   பொண்ணு
அட்டியில்ல     மட்டமில்லன்னு
ஆத்தா  சொல்லுது நான் வரேன் தாயி…

அஞ்சலை: நல்லவேளை… கோடாங்கி வரல்லேன்னா
இண்ணைக்கு ஜெயிலுக்கு போயிருப்பேன்..

கோடாங்கி:  …நல்ல   காலம்   பொறக்குது  …
நல்ல   காலம்   பொறக்குது  …
அம்மா  தாயி  அம்மா  தாயி  …

(கோடாங்கி அடுத்த தெருவில் இறங்கி நடந்தார்)


      








No comments:

Post a Comment