நல்ல காலம் பொறக்குது
நாட்டுப்புறக்
கலையிலிருந்து பிறந்த
வானொலி வடிவம்
FOLK BASED RADIO FORMAT
MADE THE PEOPLE MAD
ராபர்ட் சேம்பர் (ROBBERT CHAMBER) மக்கள் பங்கேற்பு அணுகுமுறையின் தந்தை(FATHER OF PARTICIPATORY RURAL APPRAISAL), கிராமங்களில் வேலை பார்ப்பவர்கள் முதலில் மக்களையும் மக்களிடமும் படிக்க வேண்டும்.
அவர்களுக்குத் தெரிந்த மொழியில் நமக்கு அதை சொல்லித் தருவார்கள், என்று சொல்லுவார்.
ஆசிரியராக போவதற்கு
முன் மாணவனாக இரு
அதை ஆசிரியராக போவதற்கு முன் மாணவனாக இரு ( REVERSAL IN LEARNING) என்று சொல்லுவார்.
அப்படி வானொலியில் வேலை பார்த்தபோது விவசாயம்பற்றி கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் படித்ததைவிட விவசாயிகளிடத்திலும் விவசாய வயல்களிலும் நான் கற்றுக்கொண்டது நிறைய.
அதுபோல, ஒரு வானொலிக்காரனாக மக்களிடம் சென்ற நான் அவர்களிடம் நான் ஒரு மாணவனாக படித்தவை ஏராளம்.
மதுரை
வானொலி
உதாரணமாக "நல்ல காலம் பொறக்குது" என்று குறி சொல்லும் கொடாங்கிகளின் (SOOTHSAYERS IN TAMILNADU) வாழ்க்கையைப்பற்றி ஒரு நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்காக எஸ்.ஆலங்குளம் என்ற இடத்திற்கு சென்றிருந்தோம்.
அப்போது நான் மதுரை வானொலியில் விவசாய நிகழ்ச்சியின் பொறுப்பாளராக (FARM RADIO OFFICER) வேலை பார்த்தேன்.
எனக்கு உதவியாக வேலை பார்த்தவர் மாணிக்கம் (FARM RADIO REPORTER) , 22 காரட் மனிதர். காலம் நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் ஆசாமி.
அவரும் நானும்தான் ஆலங்குளம் போயிருந்தோம்.
25 முதல் 30 குடுகுடுப்பைக்காரர்கள் குடும்பத்தோடு வசிக்கும் அதிசயமான பகுதி.
ஒரு ஆண்டில் ஆறு மாதம் வெளியூரில் சுற்றித் திரிந்து குறி சொல்லுவார்கள்.
ஆறு மாதம்தான் வீட்டில் அடைந்து கிடப்பார்கள். நாடாறு மாசம் காடாறு மாசம்.
எஸ்.ஆலங்குளம்
மதுரையின் விலாப்பகுதியில் இருந்த புற நகர்ப்பகுதி எஸ்.ஆலங்குளம்.
கோடாங்கி வாக்கும் கொடிபொன்னுக்கு சமம் என்று மக்கள் நம்பினார்கள்.
ஜக்கம்மா என்னும் தேவதையின் சக்தியினால், நடந்தவை, நடக்க இருப்பவை, நடப்பவை என்று மூன்று காலச் செய்திகளை கோடாங்கியால் எப்படி சொல்லமுடியும் ? கோடாங்கிகளின் என்பது பற்றி எல்லாம் பதிவு செய்து ஒலிபரப்பினோம்.
இவர்கள் எந்த பல்கலைக்கழகத்தில்
படித்தார்கள் ?
வித்தியாசமான அந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
அவர்கள் குறி சொல்லும் தமிழ், சின்ன வாக்கியங்கள். யாருக்கும் புரியும் தமிழ். பாடுவதற்கும் பேசுவதற்கும் வாகான வாக்கியக் கட்டுமானங்கள், ஊடாக அந்த சிற்றுடுக்கையை தள லயம் மாறாமல் அடிப்பது, குறி கேட்பவர்களுக்கு நம்பிக்கை எற்படுத்தும் செய்திகள், இது ஜக்கம்மா வாக்கு என்று சொல்லும்போது ஏற்படும் பக்தி உணர்வு, அனைத்தும் எனக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல் தொடர்பு உத்திகளை(COMMUNICATION TECHNIQUES) எல்லாம் இவர்கள் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தார்கள் ? என்னுடைய பிரமிப்பு நீங்கவில்லை.
ஒலிப்பதிவு அரங்கில் பல முறை அந்த நிகழ்ச்சியைக் கேட்டேன்.
ஒரிஜினல் கோடாங்கியை
விவசாயக் கோடாங்கியாக
மாற்ற வேண்டும்
இந்த குறி சொல்லும் வடிவத்தை (SOOTH SAYING FORMAT) பயன்படுத்தி விவசாயச் செய்தியை சொல்லமுடியுமா ? முடியும் எனத் தோன்றியது.
நான் நினத்ததை மாணிக்கத்திடம் சொன்னேன். முடியாது என்று எப்போதும் சொல்ல மாட்டார். "சரி" என்றார்.
அன்று இரவே ஒரு எழுத்துரு தயார் ! கோடாங்கியின் வார்த்தைகளில் தயார்.
ஆலங்குளத்திலிருந்து ஒரு ஒரிஜினல் குடுகுடுப்பைக்காராரை விவசாயக் கோடாங்கியாக மாற்ற வேண்டும்.
அவர் விவசாயக் குறி சொல்ல வேண்டும். அதை பதிவு செய்து ஒலிபரப்ப வேண்டும்.
அதுதான் எங்கள் திட்டம்.
அடுத்த நாள் அந்தோணிசாமியை ஆலங்குளத்திலிருந்து வனொலியின் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு இறக்குமதி செய்தோம்
.
அந்தோணிசாமி எழுதப்படிக்கத் தெரிந்த குடுகுடுப்பைக்காரர்.
நானும் அந்தோணியும் ஒலிப்பதிவு கூடத்திற்குள் இருந்தோம். மாணிக்கம் கூடத்தின் வெளியே ஒலிப்பதிவு செய்ய தயாராக இருந்தார்.
வேதாளம்
முருங்கை மரத்தில்
ஏறியது
நான் எழுதிக்கொடுத்ததை பாடிக்கொண்டே குடுகுடுப்பையை அடிக்க வேண்டும்.
நான் எழுதியதை அவருக்கு சொல்லிக் கொடுத்தேன்.
காலை 8 மணிக்கு தொடங்கினோம்.
குறியைச் சரியாய்ச் சொல்லும்போது உடுக்கை அடிக்க மறந்து போகிறது.
உடுக்கையை சரியாய் அடிக்கும்போது குறி சொல்ல மறந்து போகிறது.
மணி ஒன்பதாச்சி, பத்தாச்சி.
மீண்டும் நாங்கள் முயற்சி செய்தோம். சரியாய் இரவு எட்டுமணிக்கு " நாளைக்கு பாக்கலாம் சார்' என்றார் அந்தோணி.
நானும் சரி என்றேன்.
அடுத்த நாள் காலை 8 மணிக்கு அந்தோணி குடுகுடுப்பை அடித்தார். நான் குறி சொல்லும் பாட்டை சொல்லிக் கொடுத்தேன்.
மணிக்கம் ஒலிப்பதிவுக்கு தயார்.
இரண்டாம் நாளாக, வேதாளம் திரும்பத் திரும்ப முருங்கை மரத்தில் ஏறியது. விக்கிரமாதித்தனும் தன் முயற்சியை கைவிடவில்லை.
இன்றைக்கும் சரியாய் இரவு எட்டுமணி ஆயிற்று.
அந்தோணி முழு நம்பிக்கையுடன் என்னிடம் சொன்னார், "இது நமக்கு சரிப்பட்டு வராது சார்" என்று.
நன்றி சொல்லி அந்தோணிக்கு விடை கொடுத்தேன்.
அந்த சமயம் மாணிக்கம் ஒரு ஆலோசனை சொன்னார். அவர் சொன்னதை அப்படியே நடைமுறைப்படுத்தினோம்.
அதன்படி "நல்ல காலம் பொறக்குது" என்ற தொடர் நிகழ்ச்சி அறிமுகம் ஆனது. சாமக்கோடாங்கி சங்க்கரலிங்கமும் அறிமுகமானார்.
மதுரை வானொலியில் 7 ஆண்டுகளும், சென்னை வானொலியில் 2 ஆண்டுகளும், "நல்ல காலம் பொறக்குது" ஒலிபரப்பாகி சக்கைப்போடு போட்டது.
பாண்டிச்சேரி மற்றும் திருநெல்வேலி நிலையங்களும் அவ்வப்போது ஒலிபரப்பின.
விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், தொழில் செய்பவர்கள், என எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து வீடுகளிலும், சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் விவசாயக்குறி சொன்னார்.
விவசாயச் செய்திகளுக்காக பாதிப்பேர் கேட்டார்கள்.
"நல்ல காலம் பொறக்குது" வீட்டில் ஒலிப்பது நல்ல சகுனம் என்று நம்பி மீதிப்பேர் கேட்டார்கள்.
அதன் பிறகு தினமணி, தினமலர், மதுரைமணி, முரசொலி, முத்தாரம், கல்கண்டு ஆகிய பத்திரிக்கைகள் அந்த நிகழ்ச்சியை பாராட்டிச் செய்திகள் வெளியிட்டன.
மாணிக்கம் அப்படி என்னதான் ஆலோசனை சொன்னார் ? குடுகுடுப்பக்காரர் அந்தோணிசாமி "முடியாது" என்று சொல்லிவிட்டு போன பின்னால் சாமக்கோடங்கி சங்கரலிங்கமாக பங்குபெற்றது யார் ?
அவர் சொன்ன ஆலோசனை இதுதான்.
"இரண்டு நாளா அந்தோணிக்கு சொல்லி கொடுத்ததுல நீங்களே கோடாங்கி மாதிரி ஆயிட்டிங்க.. நீங்களே கோடாங்கியா பண்ணுங்க."
" கஷ்ட்டப்பட்டு குறி சொல்லிடுவேன்.. குடுகுடுப்பை அடிக்கணுமே" இது நான்.
"அந்த குடுகுடுப்பை ஒலியை தனியா வெட்டி ஒட்டிக்கலாம் சார்".
இதுதான் மாணிக்கம் கொடுத்த ஆலோசனை.
அடுத்த நாளே கதிவு செய்து, வெட்டி, ஒட்டி நகாசு வேலை எல்லாம் பார்த்து, நல்ல காலம் பொறக்குது" நிகழ்ச்சி தயார்.
ஆனால் இதை ஒலிபரப்பு செய்ய வேண்டுமானால் வானொலி நிலயத்தின் இயக்குனரின் அனுமதி தர வேண்டும்.
பண்ணை இல்ல ஒலிபரப்பின் மீது பற்றும் பாசமும் உடையவர் மதுரை வானொலியின் அன்றைய நிலைய இயக்குநர், இன்று அகில இந்திய வானொலியின் ஓய்வு பெற்ற டெபுடி டைரக்டர் ஜெனெரல் விஜய திருவேங்கடம்.
நிகழ்ச்சியை அவரிடம் போட்டுக் காட்டினோம்.
நிகழ்ச்சியைக்கேட்டவர் என் கைகளை இறுகப்பற்றி "அபாரம் நிச்சயம் இந்த முயற்சி வெற்றி பெறும் " என்று பாராட்டினார். அவர் வாக்கு பலித்தது.
அடுத்த நாளே அந்த நிகழ்ச்சி "நல்ல காலம் பொறக்குது" என்ற தலைப்பில் 7 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது.
அற்புதமான இந்த குறி சொல்லும் வானொலி வடிவத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள், குடுகுடுப்பைக்காரர்கள்.
No comments:
Post a Comment