Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, February 4, 2016

மலிவான கால்நடைத்தீவனம் - கட்டுரை

              
மலிவான கால்நடைத்தீவனம் 
                                                                         கட்டுரை 

      பால்மாடு வளர்ப்பதில் பெரிய பிரச்சனை தீவனம்தான். அதிலும் கோடைக்காலத்தில் ரொம்ப பிரச்சனை. தீவனம் சுத்தமா  கிடைக்காது. விலை ரொம்ப அதிகம். அதை காசுபோட்டு வாங்கி மாட்டுக்கு போட்டு பால்கறந்து விற்றால் கட்டுப்படி ஆகக்கூடிய விலை கிடைக்காது.
      
இது ஒண்ணும் அவ்ளோ பெரிய பிரச்சனையே இல்லை. சுலபமா சமாளிக்கலாம். கோடையிலயும் தீவனம் போடலாம். பால்கறக்கலாம். பால் விற்கலாம். லாபம் சம்பாதிக்கலாம். பால்மாடு வளர்க்கறவங்கள கேட்டா கதை கதையா  சொல்லுவாங்க, “புல் இல்லை சார். வைக்கோல் இல்லை சார். கிடைச்சாலும் விலை அதிகம் சார். “ அப்படின்னு  சொல்லுவாங்க. கையில் வெண்ணைய வச்சிக்கிட்டு, நெய் தேடி அலையறது இதுதான். நம்மகிட்ட என்ன இருக்குன்னு நமக்கு தெரியாது. கோடையில புல் எல்லாம் பொசுங்கிப் போயிடும். புல்லு கெடைக்காது. ஆனா மரங்கள் இருக்கும். மர இலைகள போடலாம்.  அசோலா ஒரு நீர்த் தாவரம். அற்புதமான தீவனம். அதப் போடலாம்.அசோலா எங்க கிடைக்கும் ?  இது எந்த கடையிலயும் வாங்க முடியாது. ஆனா அதை நாம்பளே உற்பத்தி செய்யலாம். இதைச் செய்யறது ஒண்ணும் பிரமாதம் இல்ல.

      மாட்டுக்கு ஒரு கிலோ புண்ணாக்கு பேடறதும், ஒரு கிலோ அசோலா போடறதும் ஒண்ணுதான்.“அப்படின்னா புண்ணாக்கே போடறோம் சார்" அப்படீன்னு சொல்லுவீங்க. ஆனா ஒரு கிலோ புண்ணாக்கு வாங்க 40 லிருந்து 50 ரூபா அழனும். அசோலா ஒரு கிலோ உற்பத்தி செய்ய, ஒரே ஒரு ரூபா  மட்டும்தான் செலவாகும். அப்படி இருக்கும்போது  ஏன் அசோலாவை யாரும் உற்பத்தி செய்யல ?  ஏன் மாட்டுக்கு போடல ? அதுக்கு  காரணம் ஒண்ணு அசோலாவைப் பற்றி அவுங்களுக்குத் தெரியாது.  ரெண்டாவது ஏதாவது சுலபமா கிடைச்சா  நம்ம ஜனங்க அதை மதிக்க மாட்டாங்க. இலவசமாக கிடைத்தாலும் மதிக்கமாட்டாங்க.
   
   நல்ல அரிசியக்கூட ரேஷன்ல போட்டா,  ரேஷன் அரிசியா ?  எளக்காரமா கேட்பாங்க 'எங்களுக்கு குடும்ப டாக்டர் குப்புசாமிதான். தொட்டுக்கூட பார்க்க மாட்டார். எந்த நோவா இருந்தாலும் ஊசிதான். நூறு ரூபா வச்சிடணும். அவ்ளோதாள்  நாங்க காசு பாக்கறது இல்ல சார்…" நிறையபேர் இப்படித்தான். நிறைய காசு செலவு பண்ணணும். அதை விளக்கமா நாலுபேர்கிட்ட சொல்லணும். அப்பொதான் நிம்மதியா இருக்கும்.

      ஊசி போடாத டாக்டர் மாதிரி இந்த அசோலா. நாற்பது ரூபா செலவு பண்ற எடத்துல, ஒரு ரூபா செலவு பண்ணா போதும். மரத்தழைகளுக்கு அதுகூட செலவு இல்லை. சில பேருக்கு சாதாரண தும்மல் வந்தாக்கூட, குடும்ப டாக்டருக்கு குத்து மதிப்பா ஒரு 500 ரூபா குடுத்துட்டு வந்தாதான் மனசு நிம்மதியா இருக்கும். அசோலா மாதிரி, மரத்தழைகள் மாதிரி, தீவனத்தின்மேல் மரியாதை வராததுக்குக் காரணம் இருக்கு.  அது என்னன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இதுக்கு முக்கியமான காரணம் பொதுவாக நமக்குப் பணம்  அல்லது நிதி பற்றிய அறிவு குறைவு. அதைப்பற்றிய விழிப்புணர்வு குறைவு.

      'உங்க மாடு எவ்ளோ கறக்குதும்மா…?"

      அதை கரெக்டா சொல்லுவாங்க. 'காலைல 7 லிட்டர் சார். சாயங்காலம் 5 லிட்டர் சார்"   'உங்க மாட்டுக்கு என்ன போடுறீங்க ? 'புல்லு போடறோம் சார். புண்ணாக்கு போடறோம் சார். பூசா போடறோம்;  சார்"  அதெல்லாம் கரெக்டா சொல்லுவாங்க'  ஏம்மா இந்த புல்லு, புண்ணாக்கு, பூசா --இதுக்கெல்லாம் எவ்ளோ ஒரு நாளைக்கு செலவாகுதுன்னு தெரியுமாம்மா ?" “புல்லு எங்க தோட்டத்துல புடுங்கி போடறோம் சார். ஆனா மத்த ரெண்டும் காசு குடுத்துதான் சார் வாங்கிப் போடறோம். ”

      'அதாம்மா அதுக்கு எவ்ளோ காசு கொடுத்து வாங்கறீங்க…?"

      “ இந்த கேள்விக்கு அவுங்களால பதில் சொல்ல முடியாது. அதுக்கு என்ன பதில் சொல்வாங்கன்னு யோசிங்க. ”   இது எனக்கு தெரியாது சார்.  அதுக்குதான் தெரியும்   ஏம்மா அதுக்குத்தான் தெரியும்ன்னா ?  மாட்டுக்கா  தெரியும் ? “இல்ல சார்…  எங்க ஊட்டுக்காரர் சார்.  அதுக்கு அதை வாங்க  எவ்ளோ குடுக்குதுன்னு அதுக்குதான் தெரியும்” மாட்டுக்கும் ‘அது’தான் புருஷனுக்கும் அதுதான்.  “ சரி ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்ளோ செலவு பண்றீங்கன்னு சொல்ல முடியுமா ?” இந்த கேள்விக்கு “அது வந்து சார். அது வந்து சார்”  நான் கேட்டேன். “ ஏம்மா இது அதுக்காவது தெரியுமா ? அதை கேட்டு சொல்றியா ?   அதுக்கு அந்தம்மா சொல்றாங்க !  “அது அதுக்குக்கூட தெரியாது சார   பிரச்சினையே இதுதான். நாம் எவ்ளோ செலவு செய்றோம் ? தெரியாது ? எவ்ளோ வருமானம் ? தெரியாது. எவ்ளோ லாபம் ?  யாருக்குத் தெரியும் ? வரவு எட்டணா செலவு செலவு பத்தணான்னு நம்ம தொழில் இருந்தா, அது கறவை மாடா இருந்தாலும் சரி, காய்கறி சாகுபடியா இருந்தாலும் சரி, கரையேற முடியாது சாமி.

      இப்போ நாம் அசோலா உற்பத்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

      அசோலா ஒரு நீர்த்தாவரம்ன்னு சொன்னேன். ஒரு கிலோ புண்ணாக்கும், ஒருகிலோ அசோலாவும், ‘சமம்’ன்னு சொன்னேன். ஆனா புண்ணாக்கு ஒரு கிலோ நாப்பது ரூபா, அசோலா  ஒருகிலோ ஒரு ரூபா ன்னு சொன்னேன். அதை எப்படி தயார் செய்யறதுன்னு பார்க்கலாம். வீட்டுக்கு முன்னாடியே  10 க்கு 3 ½ அடி அகலத்துக்கு ஒரு இடம் வேணும். அதுக்கு மேல ஒரு சின்ன கொட்டகை. அதாவது வெயிலோ மழையோ பாத்தி மேல அடிக்கக் கூடாது. இந்த அளவு பாத்தியில ஒரு நாளைக்கு 500 கிராம் முதல் ஒரு கிலோ வரைக்கும் அசோலாவை உற்பத்தி செய்யலாம்.
      

இதுக்கு என்னென்ன பொருட்கள் தேவைன்னு பார்க்கலாம். 

  • ஒரு 5 கிலோ புதிய சாணம், செம்மண் 5 கிலோ, 10 முதல் 12 குடம் தண்ணீர், சூப்பர் பாஸ்பேட் 5 கிராம். ஒரு சில்பாலின் தாள் பாத்தியின் அளவைவிட கொஞ்சம் பெரியதாக. செங்கற்கள் 50. போதுமான மணல். கைப்பிடியளவு அசோலா. அவ்வளவுதான்.

  •  பத்துக்கு மூன்றறை அடிக்கு முளை அடிச்சு பாத்தியை  மார்க் பண்ணிக்கணும். அதுல அரை அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி அப்புறப் படுத்தணும். அதுக்குள்ள சீராக மணலைப் பரப்ப வேண்டும். பாத்தியின் ஓரங்களில், செங்கற்களை நீளமான பகுதி கீழே இருக்குமாறு நீளவாட்டில், அடுக்க வேண்டும். அதாவது பாத்தியின் நான்கு பக்கமும்,  செங்கற்கள வேலி போல அடுக்கணும்.
  • இப்போது பாத்திக்குள், பாலித்தீன் தாளைப் பரப்ப வேண்டும். பாத்திக்குள் ஊற்றும் தண்ணீர் வெளியே போகக் கூடாது. ஐந்து கிலோ சாணத்தை போதுமான தண்ணீரில் கரைத்து, பாத்தியினுள் ஊற்றுங்கள். அதேபோல் 5 கிலோ செம்மண்ணையும், தண்ணீரில் கரையுங்கள். பின்னர் பாத்தியினுள் ஊற்றுங்கள். ஐந்து கிராம் சூப்பர் பாஸ்பேட்டையும், கரைத்து பாத்தியினுள் ஊற்றுங்கள்.  கடைசியாக கைப்பிடி அளவு அசோலாவை பாத்தியில் இடவும். அசோலா இரண்டாம் நாளிலிருந்து பல்கிப் பெருக ஆரம்பிக்கும்.
  •  சுமாராக ஒரு வாரம், பத்து நாளிலிருந்து அறுவடை தொடங்கலாம். அறுவடை செய்த அசோலாவினை நல்ல தண்ணீரில் முதலில் கழுவ வேண்டும். பிறகு மாட்டுக்குப் போடலாம். அசோலாவை சாப்பிட மாடுகளை பழக்கப் படுத்த வேண்டும். முதலில் புண்ணாக்கு அல்லது தவிட்டுடன் கலந்து போட வேண்டும். அல்லது அசோலாவுடன், கொஞ்சம் வெல்லம் கலந்து கொடுத்தால், மாடுகள் விரும்பி சாப்பிடும். உப்பு கலந்தும் கொடுக்கலாம்.; மாடுகள் ரசித்து ருசித்து சாப்பிடும்.
  •  15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை பாத்தியிலிருந்துது பழைய தண்ணீரை வடிக்க வேண்டும் அதற்கு பதிலாக புதியதாக தண்ணீரை விட வேண்டும்.
  •  மாதம் ஒரு முறை, சாணம் மற்றும் செம்மண்ணை எடுத்துவிட்டு புதிதாக சேர்க்க வேண்டும். மறக்காமல் ஐந்து கிராம் அல்லது ஒரு தீப்பெட்டி அளவு சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும்.
  • பாத்தியில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாத்திக்குள் வடிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மாட்டுக்கு மட்டும்தான் போடலாமா ? அப்படீன்னு ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்கள் சந்தேகம் நியாhயமான சந்தேகம்.  ஆட்டுக்குப் போடலாம். முயலுக்குப்போடலாம். கோழிக்குப் போடலாம். மீனுக்கும் போடலாம்,
  •  ஏன் ? நாம் கூட சாப்பிடலாம். கீரை அடை, கீரை போண்டா, கீரை வடை, கீரை தோசை, எல்லாத்துக்கும் பயன்படுத்தலாம். உபயோகப் படுத்தும்போது, நல்லா கழுவிவிட்டு பயன்படுத்தணும்.
  •  ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் இரண்டு பாத்திகள் இருக்க வேண்டும். ஒன்று மண்பழு உற்பத்தி பாத்தி. இன்னொன்று அசோலா பாத்தி. இரண்டும் உங்கள் செலவைக் குறைக்கும்.
      

No comments:

Post a Comment