Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, March 13, 2016

தேர்தல்



                                                        'வேட்பாளர் தேர்வுப்பட்டறை,
                                            அகில இந்திய வாழ்க்கை முன்னேற்றக் கட்சி,
                                                            கீழ்ப்பாக்கம், சென்னை – 10"

      மேற்படி அலுவலகம் இருந்த சாலையில் கடந்த ஒருமாத காலமாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. கட்சி அலுவலகத்திற்கு வந்துபோவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

      இதற்கு காரணம் சமீபத்தில் அறிவிக்கப் பட்டிருந்த தேர்தல்தான். அதிலும் ஓரிரு நாட்கள் நாடு முழுவதற்குமான வேட்பாளர்களை முடிவு செய்தாக வேண்டும். அரசுக் கட்சியில் இருந்த எந்தஒரு கட்சியும் கெட்ட பெயர் எடுப்பதைப்  போலவே, சமீபகாலம் வரை இருந்த ஆளுங்கட்சியும் செல்வாக்கு இழந்திருந்தது.

      வாழ்க்கை முன்னேற்றக் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பது துலாம்பரமாகத் தெரிந்தது. பத்திரிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கை முன்னேற்றக் கட்சியை ஆதரித்து கட்டுரைகள் எழுதின.

      நாடு தழுவிய அளவில் வந்து கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்று, “வாழ்க்கை முன்னேற்றக் கட்சியின் தேர்தல் பலாபலன்கள்…” என்று கம்ப்யூட்டர் மூலமாக கணிக்கப்பட்ட ஜோசியக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

      இதனால் வா.மு.க. தலைவர் வருங்கால முதல்வர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். இதர கட்சியில் அரிய பெரிய தலைவர்களும் தாங்கள் எந்தத் துறைக்கு மந்திரியாக வேண்டும் என்று தீர்மானித்து காத்திருந்தனர்.

      இதனால் திடீரென்று வா.மு.க.வின் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. சீட்டுகளின்; விலை விஷம்போல ஏறிவிட்டது.
     

வா.மு.க. வில் ஒரு 'க" நிற்கவைத்தாலும் ஜெயிப்பது உறுதியென்று  சொல்லிக் கொண்டனர். எனவே ஊர் நாடுகளில் வாய்ச் சவடால்காரர்கள்; மடிநிறைய பணத்தையும், மனம் நிறைய கோட்டையும் கட்டிக்கொண்டு கீழ்ப்பாக்கம் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள்.

      வேட்பாளர்களுக்கு மனுச்செய்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்; கடங்காமல் போனது. வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பிரத்தியேகமான ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் கட்சியின் கொறடா பாயும்புலி பஞ்சாட்சரம், தொழிலாளர் அணித் தலைவர் வியர்வைத்துளி வீராசாமி ஆகியோர்; முக்கியமானவர்கள். கருப்புப்புறாதான் கட்சித்தலைவர். அவர்; பெயருக்கு பின்னால் ஒரு சரித்திரம் ஒளிந்துகொண்டிருந்தது.

      சில ஆண்டுகளுக்கு முன்னால் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ஒரு போராட்டத்தை நடத்தினார். அந்தப்போராட்டம் இந்தநாட்டை சுனாமியாய் புரட்டிப்போட்டது. அப்போராட்டத்தை துவக்கும்போது ஆயிரம் கருப்பு புறாக்களை பறக்கவிட்டார். அன்று முதல் அண்ணனுக்கு 'கருப்புப்புறா" என்ற பெயர் நிலைத்து விட்டது.

     இப்போது கருப்புப்புறா உள்ளிட்ட தேர்வுக்குழு வேட்பாளர்களை சந்திக்க தயாராக காத்திருந்தது. வேட்பாளர்கள் ஒவ்வொருவராக தேர்வுக் குழுவை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். தேர்வுக் குழுவில் தேர்வாவது சாதாரண விஷயமில்லை. தேர்வுக்குழு வேட்பாளரை எம்.எல்.ஏ. வுக்கு தெரிந் தெடுத்தது என்றால், அவர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்றே அர்த்தம்.

      எனவே வேட்பாளர்கள் அம்புட்டுபேரும் பயபக்தியுடன் தேர்வுக் குழுவை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். பத்துபேருக்கு ஒருவர்கூட தேர்வாகவில்லை. சிலர் போனமச்சான் திரும்பி வந்தான் என்று சுவற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்தார்கள். இன்னும் சிலர் ஒருமணிநேரம் கழித்து உதட்டை பிதுக்கியபடி வந்தார்கள். வேட்பாளர் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

'சந்நியாசிப்பட்டி காசி..சந்நியாசிப்பட்டி காசி"  என்று வெளியில் நின்றிருந்த ஊழியர் ஒருவர் சப்தமிட்டு அழைக்க, சந்நியாசிப்பட்டி காசி உள்ளே நுழைந்தார்.

சந்நியாசிப்பட்டி காசியைப் பார்த்ததும் தேர்வுக்குழுவே ஒரு கணம் அதிர்ச்சியடைந்தது. காரணம் காசி அரைக்கால் சட்டையும் அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். தேர்வுக் குழுவினர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஆனால் கருப்புப் புறா மட்டும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல்; உட்கார்ந்திருந்தார். 

காசி அரைக்கால் சட்டையும், அரைக்கை சட்டையும் அணிந்து காலையில் ஜாகிங் செய்யப் போகும் ஆளைப்போல தோன்றினார். “உட்காரும்" என்றார் கொறடா பாயும்புலி.

      'எலக்ஷன் வந்துக்கிட்டிருக்கு…. எனக்கு உட்கார்ந்து பேச நேரமில்லை…  எனக்கு டிக்கட் உண்டா இல்லையா…? இருந்தாலும் இல்லைன்னாலும் கட்சி வேலை தலைக்குமேல கிடக்கு….” என்று சொல்லிவிட்டு காசி அப்படியும் இப்படியுமாக நடந்தார். கருப்புப் புறாவின் முகத்தில் ஒரு பளிச்;
.
      'குட் பீல்டுவொர்க்கர்" என்று கிசகிசுத்தார் வியர்வைத்துளி வீராசாமி. 

      'உங்க பேர் என்னா சொன்னீங்க… ?" கேட்டார் கொறடா.

      'இன்னும் சொல்லல… இப்போ சொல்றேன்…. சந்நியாசிப்பட்டி தொகுதிப் பேரு,… எம்பேரு காசி…. எல்லோருக்கும் சந்நியாசிப்பட்டி காசின்னாதான் தெரியும். தொகுதியையும் என்னையும் பிரிக்க முடியாது….”என்றார் காசி.

      கருப்புப் பறாவின் முகத்தில் பிரகாசம் கூடியது.

      'கொஞ்சம் அதிகப்பிரசங்கி…" ரகசிய குரலில் சென்னார் வியர்வைத்துளி வீராசாமி.

      கொறடா அடுத்த கேள்வி கேட்க ஆயத்தமானார். ஆனால்அவர் மனதில் வித்தியாசமான உணர்வுகள் தோன்றிய வண்ணம் இருந்தன. எல்லாம் நன்றாக நடந்து முடிந்தால் நடந்தே வருவேன் உன் சந்நிதானத்துக்கு என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டார். காரணம் ஒருஎள் முனையளவு தவறு என்றால்கூட கருப்புப்புறாவை சமாதானப் படுத்த முடியாது. அது கருப்புப்புலி ஆகிவிடும். கொறடா பதவியை குறடு போட்டு பிடுங்கி விடுவார்.

      தேர்தல்தேதி அறிவிப்பு வெளியான பின்னர் இதுவரை மூன்று முறை கட்சிக்கொறடா மாற்றப்பட்டு விட்டார். பாயும்புலி மூன்றாவது கொறடா. அதனால்தான் தேர்வுக்கு வரும் வேட்பாளர்களிடம்கூட கொறடா மிகவும் பயபக்தியோடு நடந்துகொண்டார். 

      'நீங்க எதுவரைக்கும் படிச்சி இருக்கீங்க…?" ஜாக்கிரதையாகக் கேட்டார் பாயும்புலி.

      'பேப்பர் படிப்பேன்…. மணி பார்ப்பேன்… கைநாட்டுன்னு யாரும் சொல்ல முடியாது… இதுபோதுமில்ல…..?" அலட்சியமாக சொன்னார் காசி.

      'படிக்காதவன் ஆனாலும் திமிர் புடிச்சவன்….” தனக்கே கேட்காதமாதிரி முனகினார் பாயும்புலி.

      'சரி… என்ன ஜாதி நீங்க…?" என்று கேட்டார் வியர்வைத்துளி வீராசாமி

      'எங்க சந்நியாசிப்பட்டி தொகுதியில் யாருக்கு அதிகமான ஓட்டு இருக்கோ … அந்த ஜாதி நான்…  யாதும் ஊரே யாவரும் கேளீர்.."  பட்டென்று பதில் வந்தது.

      'பெரிய கவிஞர் பூங்குன்றனார் இவரு…. சோம்பேறி"….என்று மனசுள் கரித்துக் கொட்டினார்; பாயும்புலி.

      'சரி நீங்க எம்.எல்.ஏ.  ஆன பின்னாடி …. லஞ்சம் வாங்குவீங்களா…?" என்று கேட்டார் வியர்வைத்துளி. 

      'மூச்சு விடுவீங்களா ன்னு கேக்கறமாதிரி இருக்கு….உங்க கேள்வி" சிரித்துக்கொண்டே சொன்னார்.

      'லட்சக் கணக்கான பணத்தை செலவு பண்ணி சமுதாய சேவை பண்;றதுக்கு  எனக்கு என்னா பைத்தியமா புடிச்சிருக்கு…? என்று கேலியாகக் கேட்டார். 

      'நம்மையெல்லாம் போட்டுத்தள்ளிடுவார்…. மொடாமுழுங்கி…” என்றார் வியர்வைத்துளி வீராசாமி.
 
      'அப்படின்னா உங்கள ஒரு சுயநலமின்னு சொல்லலாமா…?" கேட்டார் பாயும்புலி.

      'இல்லை மக்கள்நலம்….” இப்படிச் சொன்னதும் பாயும் புலியும் வியர்வைத்துளியும் பகபகவென சிரித்துவிட்டனர். கருப்புப்புறா எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக உட்பார்ந்திருந்தார்;. 

      'ஏன் சிரிக்கிறீங்க…? நான் நல்லா இருந்தாதான் கட்சி நல்லா இருக்கும்;.. கட்சி நல்லா இருந்தாதான் மக்கள் நல்லா இருக்க முடியும். ஆக என்னோட சுயநலம் மக்களோட பொதுநலத்துல அடங்கியிருக்கு…இதுதான் அரசியல்ல ஏபிசிடி" என்று விவரமாக விளக்கினார்  காசி.

      பாயும்புலியும் வியர்வைத்துளியும் வாயடைத்துப் போயினர். 'கடப்பாறையை முழுங்கிவிட்டு கஷாயம் குடிக்கறான்….” என்று மெல்லிய குரலில் வியர்வைத்துளி வீராசாமி சொன்னார் பாயும்புலியிடம்.

      'சரிங்க இப்படி நீங்க … அரைக்கால் சட்டையும், அரைக்கை சட்டையும் போட்டுக்கிட்டு வந்ததுக்கு ஏதாவது காரணம் இருக்குமே…?" கேட்டார் வியர்வைத்துளி  வீராசாமி.

      'சட்டையும் என்னோட சட்டை. உடம்பும் என்னோட உடம்பு. எனக்கும் புடிச்சிருக்கு….நீங்க ஏன் தங்கப்பல்லு கட்டிக்கிட்டு இருக்கீங் கன்னு உங்கள நான் ஏதாவது கேட்டேனா…?  கேட்கமாட்டேன்…."

      இப்படி இவன் சொல்லி முடித்ததும் கருப்புப் புறா சொன்னார். 

      'சந்நியாசிப்பட்டி தொகுதிக்கு இவர்தான் வேட்பாளர்…"

      பாயும்புலியும் வியர்வைத்துளியும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தனர். இந்த முதல் அதிர்ச்சி அடங்கி முடிவதற்குள் இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று இரண்டு போலிஸ்காரர்கள் உள்ளே நுழைந்து ‘லபக்’ கென்று சந்நியாசிப்பட்டி காசியை மடக்கிப்பிடித்தனர். அவர்களுக்குப் பின்னால் வெள்ளைச் சீருடை அணிந்த இருவர் வந்தனர்.

      'சார் இந்த ஆள் மென்ட்டல் ஆஸ்பித்திரியில இருந்து தப்பி வந்துட்டான் சார். மென்டல் சார்….." என்று சொல்லிவிட்டு போலீஸ்காரர்கள் சந்நியாசிப்பட்டி காசியை இழுத்துச் சென்றனர். 

      'சாரி சார்….” ஆஸ்பத்திரி ஆசாமிகளும் அங்கிருக்து நகர்ந்தனர். பாயும்புலியும் வியர்வைத்துளியும் கதிகலங்கிப் போனார்கள். கருப்புப்புறா அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் கோபமாக இருக்கிறாரா…? இல்லையா….?  என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

      தேர்வுக்குழு பதவி போகுமா….? கோறடா பதவுP பறிபோகுமா…? அடிப்படை உறுப்பினர் அந்தஸ்து பறிபோகுமா…? யாரும் ஒன்றும் சொல்ல முடியாது….
      கருப்புப்புறா மௌனத்தை உடைத்தார். 

      'சந்நியாசிப்பட்டிக்கு காசிதான் வேட்பாளர்.. இதில் எந்த மாற்றமும் இல்ல... எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. மொதல்ல வேட்பாளரை வெளியக்கொண்டாங்க.." 

அடுத்தநாள் பலபலவென விடியும்முன் பாயும்புலியும் வியர்வைத்துளியும் கீழ்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் ஆஜர் ஆனார்கள்.                      
 
          
 
      
 




No comments:

Post a Comment