Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, March 13, 2016

கோமணங்கட்டி

(பனந்தோப்பில் பிறந்து வளர்ந்து ஒற்றைக் கோவணத்தை மட்டுமே சீருடையாகக் கொண்ட பள்ளிக்கூட வயது பையன.; இந்த சமூக அவலம் குறித்து அவன் மனதில் எழும் கோபம்தான் இந்த கதை)  

      சாணாங்குடிசை ஊருக்குப் பக்கத்தில் இருந்த பனந்தோப்பில் ஏறக்குறைய நடுப்பகுதியில் இருந்தது. பனை மரங்களின் அடர்த்தியிலும், புளிய மரங்களின் கிளைப் பரப்பிலும், அந்தக்குடிசை அந்திசந்தி எந்த நேரமும் நிழல் காத்துக் கிடந்தது. ஏறத்தாழ ஏழெட்டு வருஷங்களாக மரமேறிகுறிஞ்சிப்பாடியான் (கு.பா) தான் குத்தகை எடுத்து மரம் ஏறிக் கொண்டிருந்தான். இனி கு.பா என்றால் குறிஞ்சிப்பாடியான்.

      அன்று தோப்புக்கு வெளியே வெய்யில் ஏறிக் காய்ந்தது. தோப்புக்குள் வெளிச்சம் திட்டுத் திட்டாய் சிந்திக் கிடந்தன. கு.பாவுக்கு வீடு பக்கத்தில் இல்லை. அது வேறு எந்த கிராமத்திலோ  இருந்தது. சாத்துநாளையில் மட்டும் தோப்பில் ஓலைக்குடிசையிலேயே வருஷத்தில் ஆறேழு மாசத்திற்கு காத்துமழை பாராமல் பெண்ஜாதி பிள்ளையோடு தங்கியிருப்பான். சாத்துநாள் என்றால் பதநீர் இறக்கும்காலம். அதனை ஒரு குறிப்பிட்ட மாதங்களில்தான் செய்ய முடியும்.

இந்தகாலகட்டத்தில் பதநீர், கள், நுங்கு, வெல்லம் என தோப்பிற்கு ஜனம் வந்தபடி இருக்கும். 

      கு.பாவின் மகனுக்கு ஆறேழு வயசிருக்கும். குடிசைக்கு எதிரில் உட்கார்ந்து அடுப்பெறிப்பதற்காக கொட்டிவைத்திருந்த, காய்ந்துபோன பனங்குடுக்கைகளை குவியலிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து எதிரில் இருந்த புளியமரவேரில் எறிந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு வைத்தபெயர் நெல்லிக்குப்பத்தான். வழங்கும் பெயர் கோமணங்கட்டி. குறிஞ்சிப்பாடியில் பிறந்ததால் குறிஞ்சிப்பாடியான். கு.பா. வின் அப்பா வைத்த பெயர். 

      கு.பா. சற்றுத் தொலைவில் பனங்காய் வெட்டிக் கொண்டிருந்தான். அவன் பொஞ்சாதி குப்பு ஒரு பல்லாவிலிருந்து கள்ளை பன்னாடை மூலம் வடிகட்டி படியில் ஊற்றிக் கொண்டிருந்தாள். மினி சைஸ் குடம்தான் பல்லா என்பது. மரங்களிலிருந்து பதநீர் சேகரிக்க பாளைவாயில் இதைத்தான் கட்டிவைப்பார்கள்.

      படிக்கள்ளை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஏப்பாணத்துப் பனையின் அடிமரத்தில் சாய்ந்து உட்கார்ந்தார் ஆட்டுக்கார கோனார். படியில்; நுரைத்தபடி இருந்த புளித்த கள் ஆட்டுக்காரரின் மூக்கைத்துளைத்தது. நாக்கு உதடுகளை ஈரப்படுத்த உடம்பு சிலிர்த்தது. படியை எடுத்து வாயில்வைத்தார்.

ஏப்பாணத்து மரங்களில் மட்டைகளும் காய்களும் பெரிதாக இருக்கும். பன்னாடை என்பது பனம்பாளைகளுக்கு அடியில் இருக்கும.; சல்லடைத்துணி போன்றது. இதைப் பயன்படுத்திதான் பதநீர் மற்றும் கள்ளை வடிகட்டுவார்கள்.

      பல்லாவின் வாயின்மீது பன்னாடையை பரப்பி வைத்துவிட்டு அடுப்பிடம் போனாள் குப்பு. பன்னாடையின் மீது குடிகார ஈக்களும், எறும்புகம் நுரையோடு நுரையாக அப்பிக் கிடந்தன. 

அடுப்பில் மத்தியானக் கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. வெளியே எறிந்து வந்த தணலை உள்ளே தள்ளி விட்டாள் குப்பு. ஒரே சமயத்தில் அவள் பல வேலைகளைப் பார்க்கவேண்டும்.

அந்திசந்தி எந்த நேரத்திலும், கு.பாவின் பனந்தோப்பில் பார்க்லாம் ஆட்டுக்காரரை. அவருக்கு ஒருமரத்து கள்ளாகக் கொடுக்க வேண்டும். அப்படி குடிப்பவர்களிடம் 'எமதர்மராஜாவே எட்டி நிற்பான்.." என்பார். அவர் கிட்டத்தட்ட 300 ஆடுகளுக்கு சொந்தக்காரர்.

பனந்தோப்பிலிருந்து திரும்பும்வரை ஆடுகள் கட்டுப்பாடாக மேய்ந்து கொண்டிருக்கும். வயல்களில் இறங்கி பயிர்களை மேயாத ஒழுக்கமான ஆடுகள்.

அவர் கையில் வைத்திருக்கும் தழை கழிக்கும் சொரட்டுக்கோலில் பாதி உசரம் இருப்பார். இடுப்பில்மட்டும் ஒரு வேட்டி தார்பாய்ச்சி கட்டி இருப்பார். தலையில் ஒரு வேட்டியை தலைப்பாகை கட்டி இருப்பார். 

     “ஏண்டா குறிஞ்சி…? என்னா ஒம்மொவனுக்கு கோவம் ? குடுக்கைய வாரி புளியமரத்து வேர்ல அடிச்சிக்கினு இருக்கான்… குடுக்கையாலயே மரத்தை சாய்க்கப் போறானா…?"  ஆட்டுக்காரர் கள்ளின்மேல் ஓரமாக மிதந்த ஈயினை விரலால் எடுத்து சுண்டி எறிந்துவிட்டு குறிஞ்சிப்பாடியானைப் பார்த்தார்;.

      நுங்கு வெட்டுவதை சற்று நிதானப்படுத்தி நிறுத்தி “அது அடங்காப்பெடாரி சாமி… சொன்னப் பேச்சக் கேக்காது." என்று சொல்லி மீண்டும் வெட்ட ஆரம்பித்தான்.

      ஆட்டுக்காரர் வடைப் பொட்டலத்தைப் பிரித்தவாறு  “ டேய் கோமணங்கட்டி…”பையனை கூப்பிட்டார். அதுதான் அவர் அவனுக்கு வைத்த பெயர். அவன் தொடர்ந்து குடுக்கைகளை வாரி வீசிக் கொண்டிருந்தான் காதில் விழாத மாதிரி. 

      எப்போது கள் குடிக்க வந்தாலும், வடைகளில் இரண்டு மூன்றை அவனுக்கு கொடுப்பார். அதற்கு அவன் குடிசையிலிருந்து  பச்சை மிளகாய் கொண்டுவந்து கொடுப்பான்;.

    “நீங்க அவன கோமணங்கட்டின்னு கூப்பிடகாட்டியுந்தா நெஜார் தச்சுக் குடுடான்னு ஏந்தாவ வாங்குறான்…”  தூரத்தில் கிடந்த காய் ஒன்றை பாளக்கத்தி நுனியில் கொத்தி எடுத்து, குவியலில் சேர்த்துக் கொண்டான் கு.பா.

      'அதுசரி பத்துப்பன்னண்டு வயசு ஆவப் போவுதே… அவுனுக்கு ஒரு ரட்டுத் துணியிலயாவது ஒரு காலுசட்;டை தச்சுப் போட்டா வருசக் கணக்குல மாட்டிக்கினு கெடப்பானே…"

      'வேலக்காரன் சமாச்சாரம் வெளியக் கெடந்தா என்னா...? உள்ளக் கெடந்தா என்னா சாமி…? அவன் என்னா பள்ளிக் கொடத்திலயா படிக்கறான்…?"

     “இப்படிப் பாத்தா ஊருல முக்கா வாசிப்பேரு அம்மணக் குண்டியாத்தா அலையனும்…” ஆட்டுக்காரர் பொட்டலத்திலிருந்து ஒரு வடையை எடுத்து கடித்தபடி எதிரில் இருந்த படிக்கள்ளை எடுத்து லேசாக மோந்து பார்ப்பதைப் போல் நோட்டம் விட்டார். புளிப்பு வாசனை குப்பென்று மண்டைக்கு ஏறியது.

     “அதுக்கு இல்லைங்க … வர்ற நாலு தம்பிடி வாயிக்கும் வவுத்துக்குமே சரியா இருக்கு…” குறிஞ்சிப்பாடியான் இடதுப்புற கன்னத்தில்  அடக்கியிருந்த வெற்றிலை கொத்தையை துப்பிவிட்டு, பக்கத்தில் லோட்டாவிலிருந்த தண்ணீரில் வாய்க் கொப்பளித்தான்.

      'சாத்து நாளுல கூடமாடா நாலுகாசு வராமப் போச்சி…?"

     “நம்மப்பொழப்பே ஆறுமாசந்தானே…? நாலு காசி சம்பாரிச்சாலும் மழைஅடவுல குந்தித்தின்றதுக்கு காணுமா…? பத்தாததுக்கு போலீசு… கேசு…"

      கண்ணை இறுக மூடிக்கொண்டு மீசையின் பாதிப்பாகம் படியில் மறைய, ஒரே நெட்டில்; கள்ளைக்குடித்துவிட்டு சுதாரித்தபடி படியை கீழே வைத்தார். மீசையில் படிந்த கள்நுரையை விரலால் வழித்துவிட்டுக்கொண்டு தொண்டையை செறுமினார்.

  நுங்கு வெட்ட வெட்ட எதிரில் முட்டாய் குவிந்துபோன குடுக்கைகளை கத்திப்பிடங்கால் தள்ளிவிட்டு கூடையில் வெட்டிப்போட்ட நுங்கினை, எவ்வளவு தேறும் ? என்பதைப்போல் சாய்த்துப் பார்த்தான் கு.பா.

      இந்த வடைய வந்து எடுத்துனு போவச் சொல்லுடா அவன… அவனுக்கு என்னா கோவமா இன்னக்கி எம்மேல..? பொலிகெடா மாதிரி மொறச்சிக்கினு இருக்கான்.

     “டேய்… ஆட்டுக்காரர் கூப்பிடறாரு பாருடா…” 

      பாளக்கத்தியின் பளபளத்த கூர் பகுதியில் நீலம் பாரித்திருந்த பனங்காய்த்துவர்ப்பை மொரடுதட்டிப் போயிருந்த உள்ளங்கையில் திருப்பிதிருப்பித் துடைத்துக் கொண்டு, பையனை விரட்டினான்;.

      பையன் திரும்பிப் பார்த்தான். பின்னர் நிதானமாக எழுந்து ஆட்டுக்காரரின் எதிரில் வந்து நின்றான். ஆட்டுக்காரர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பையன் தயங்கினான்.

     “ டேய்… கோமணங்கட்டி, எடுத்துனு போயண்டா…”

      ஓன்றும் பேசாமல் இலையோடு இருந்த இரண்டு வடையையும் எடுத்துக் கொண்டு போனான்.

      வாசலின் மேலே கட்டியிருந்த பனை வாரில்  நச்சென்று தலையில் இடித்துக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், குடிசைக்குள் நுழைந்தான்.
     “கலகலன்னு இருப்பான்… அடிச்சிட்டயா…? "

     “அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க… ஒலை வைக்கறதுக்கு ஒரு பல்லா தண்ணி கொண்டான்னு சொன்னேன்… “ நம்ம சுந்தர நயினார்  வூட்டு கெணத்துக்குப் போனான்…”

     “ யாரு… நம்ம பலராம நயினார் பேரனா…?  "

           “ஆமா நடுலவர்.. "

     “சரி… அப்பொறம்…?" 

     “அப்பொறம் என்னா சாமி…? இவன் போற நேரத்துல அவரே தண்ணி எடுத்துக்கினு இருந்திருக்காரு…” 

     “யாரு…? " 

     “அவருதான்…."

     “ஏன்… அவரு வீட்டம்மா இல்லையா…?" 

    “அது ஒரு கோராம… அந்தம்மா பேருல சந்தேகமாம்…அதனால வெளியவாசல்ல எங்கயும் அனுப்ப மாட்டாராம்…” 

    “அந்தம்மா என்னா அந்த மாதிரியா…?"
    “நீங்க ஒண்ணுங்க… பாலாசி நண்டு மாறிங்க… தங்கக்கம்பிங்க…”
    “சரிசரி அப்பொறம்…?"

      'இங்க தண்ணி எடுக்கக் கூடாது போடா"ன்னு சொல்லிருக்காரு.  இவன் ஒடனே   சரின்னு வந்துட வேணாம்…?  அங்கய நின்னுகினு இருந்துருக்கான்.
    “ம்ம்ம்…"

    “அப்பொறம் பல்லாவைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டு இவங்கையில இருந்த அகினியப்புடுங்கி, ரெண்டு விசிறுவிசிறிட்டு இருக்காரு….”

    “அடப்பாவி… சரியான  பிள்ளக்காபையன்டா அவன். "

    “இவன் அங்கயே மொறச்சிக்கினு நிக்கறான்பாருங்க… என்னாடா இன்னுங் காணாமேன்னு ஒருநடை போயிப்பாத்துட்டு அவனை கூட்டியாந்தேன்"

      'கெணத்துல சாணான் தண்ணி எடுத்தா ஒட்டிக்குதாமா  தீட்டு…? அவம் பல்லாவில சாறுகுடிக்கும்போது தீட்டு தெரியலையா…? நாக்கப்புடுங்கிக்கறமாதிரி நாலு கேழி கேட்டுட்டு வர்றதுதான…?"

      பையன் பச்சை மிளகாயும் கையுமாக வந்து நின்றான்.

      பணங்காசிகாரர்கிட்ட நம்மபோயி என்னாசாமி பேசறது…?  இந்தப்பையன் அவரு சொல்லும்போதே வராம ஒட்டாரமா நிண்ணுக்கினு இருந்திருக்காம் பாருங்க… மொளச்சி மூணுஎல விடறதுக்குள்ள இதுக்கு என்னாசாமி அம்மாங்கவுரவத்த…? 

      பையனிடமிருந்த பச்சைமிளகாய வாங்கிக்கொண்ட ஆட்டுக்காரருக்கு, சுரீரென்று கோபம்வந்தது. “என்னாடா பொல்லாத பணங்காசி…அவனுக்கு எப்படி பணம் வந்ததுன்னு எனக்குத் தெரியும்… அம்பட்டன் குப்பையகௌர்ன கதைதான். இவனுங்களும் வெள்ளவேட்டி கட்டிக்கினு வெளிய வரானுங்க பாரு. ஒருமனுஷன்னு த்தூ…” காறித்துப்பினார்.

    “நரி வலம்போனா என்னா …?  இடம்போனா என்னா …?  நம்ம மேல உழுந்து புடுங்காம போனா சரி…”

      ஆட்டுக்காரர் கோபத்தில் எதுவும் பேசவில்லை. ஒரு பச்சை மிளகாயை காம்போடு கடித்துக் கரகரவென்று மென்றார்.

      குறிஞ்சிப்பாடியானும் அதற்குமேல் பேசவில்லை.
      பையன் பனங்குடுக்கைக் குவியலில் உட்கார்ந்திருந்தான். 

    “டேய் கொளத்திலயாவது போய் ஒரு பல்லாதண்ணி மொண்டுனு வாயண்டா…அப்பொறம் சாப்படற நேரத்துல தூக்கிக்கிட்டு ஓடுவெ…”
கிணற்றில் தண்ணீர் எடுக்கமுடியாத சமயங்களில் அங்கு ஆடுமாடுகளை  குளிக்கவைத்து துணிதுவைக்கும் பாப்பான்குளம்தான் தண்ணீர் உபயம் செய்வது.
  
      கோவிந்தம்மாள் துவையல் அரைத்துக்கொண்டிருந்தாள்.
      பையன் நின்று திரும்பிப் பார்த்தான்.

    “எப்பா... சுண்ணாம்பு இல்லாத பல்லாவாப் பாத்து எடுத்துக்கினு போடா கண்ணு…” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நுங்கு வெட்டினான்.

      பையன் குடிசைக்கு பக்கத்தில் கவிழ்த்து வைத்திருந்த சாத்து பல்லாக்களில்    ஒன்றை எடுத்துக் கொண்டு குளத்தை நோக்கி நடந்தான்.
      பாப்பான்குளம் ரொம்பவும் பக்கம்தான்.

      அவன் குளக்கலையில் ஏறி இறங்கும்போது ஏகாளி தாழியில் வெள்ளைத் துணிகளுக்கு நீலம் பிழிந்துக் கொண்டிருந்தான். அவன் பொஞ்சாதி துணி காயவைத்துக் கொண்டிருந்தாள்.

      அந்தப்புறம் மாட்டுக்கார பையன்கள், எருமைகளை குளிப்பாட்டிக் கொண்டு கொட்டம் அடித்தார்கள்.

      வெளுப்புக்கல்லுக்குப் பக்கத்திலேயே வாண்டுகள் சில அம்மணமாய்க்குண்டியுடன் குதியமாடிக் கொண்டிருந்தன.

      அவன் தண்ணீருடன் குடிசைக்குப்போய் சேரும் போது, ஆட்டுக்காரர் கடைசிமிணறு கள்ளை காலிசெய்துவிட்டு படியைக் கீழே வைத்துவிட்டு 'ஏவ்" ஏப்பம் விட்டார்.

            குறிஞ்சிப்பாடியான் நுங்கு வெட்டி முடித்து பொத்தார் கட்டிக் கொண்டிருந்தான்.

பனைமட்டையில் கட்டும் நுங்கு பொட்டலம்தான் பொத்தார். சம்பு என்பது அதில் கட்டும் குடை. மான்மார்க்குடை அப்போது ரொம்பவும் பிரபலம். ஆனால் அது பணம்படைத்தவர் கைகளில் மட்டுமே பிடிபடும்;.

      கோ.க. மத்தியானம் கஞ்சிகுடித்ததும் நுங்குவிற்கவேறு போக வேண்டும்.
      பல்லாவை வைத்துவிட்டு அவசரமாய் குடிசைக்குப் பின்னால் ஓடி பனை வரிசைகளைத் தாண்டி, பார்வையை நிலைக்கவிட்டான். 

      தூரத்தில் தெரிந்தது சுந்தரநயினார் தோட்டமும் கிணறும்.
      குடிசைக்கு பக்கத்தில் பனைவரிசைகளுக்கு இடையேசென்ற கொடிப் பாதையில் நடந்தான்.

      புதரோடு புதராக தழையும் தாம்புமாக வளர்ந்திருந்த சீத்தாச் செடிகள் சௌகரியமாய் இருந்தது பையனுக்கு மறைத்து கொள்ள.
      தோட்டத்தின் பின்பகுதி பீனாரிச் செடிகளும், ஆடாதொடை செடிகளுமாய் புதர் மண்டிக் கிடந்தது. தோட்டத்தின் முன் பகுதியில் போன வருசம் போட்டிருந்த, கத்தரிச் செடிகள் வெறும் சிம்புகளாய் நின்றுகொண்டிருக்க, சில செடிகள் மட்டும் கரட்டுக்காய் சுமந்திருந்தன.

      சுந்தரம்நயினார் வாளியில் தண்ணீர் எடுத்து செப்புக்குடங்களில் நிரப்பிக் கொண்டிருந்தார். 

      பீனாரிச் செடிகள் கொத்தாய் பூத்துக்கிடந்தன.

      ஓரு குடத்தை தோளிலும் இன்னொன்றை கையிலும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அந்த தரைக்கிணற்றில்; கால் வைத்து தண்ணீர் மொள்ளத்தோதாக குறுக்கே போட்டிருந்த பனை வாரில் தாம்புக் கயிறு கட்டியிருந்தது. வாளியிலும் பக்கத்திலிருந்த ஒரு இடத்திலும் தண்ணீர் நிரம்பியிருந்தது.

      அவர் குடங்களை வைத்துவிட்டு அல்லது ஊற்றிவிட்டுவர  இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். பெரிய தோட்டம். தோட்டத்தின் முன்பகுதியில் சற்றுத் தொலைவில் இருந்தது அவர்வீடு. 

      புதருக்கு பின்னால் இருந்து வேகமாக எழுந்து கிணற்றடிக்கு ஓடினான்.
      வாளியிலும் குடத்திலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. 

      இதேமாதிரி ஒரு வாளியை அப்பாவிடம் வாங்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான். பித்தளைக்குடம் பளபளவென்று இருந்தது. குனிந்து பார்த்தான் தண்ணீரில் முகம் தெரிந்தது.

      நிமிர்ந்து பார்த்தான் யாரும் வரவில்லை. மார்பு படபடவென அடித்துக் கொண்டது.

      முதலில் குடத்திலும் அப்புறம் வாளியிலும், ஏற்கெனவே வாயில் கூட்டி வைத்திருந்த  “எச்சிலை" கொத்து கொத்தாக காறித்துப்பி விரலால் கலக்கி விட்டான். நுரைதெரியாமல் தண்ணீரோடு தண்ணீராக அது கரைந்தது.

      சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் மீண்டும் அதே இடத்தில் வந்து உட்கார்ந்தான். 

      கொஞ்ச நேரத்தில் சுந்தரநயினார் குடத்தையும், வாளியையும் எடுத்துக் கொண்டு கயிற்றை சுருட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனார். 

      கிணற்றுக்குப்பக்கத்தில் கொய்யா மரத்திலிலிருந்து ஒரு ஐந்தாறு அணில்கள் வலைத்தூக்கியபடி “வீல்வீல்" என  கத்திக்கொண்டிருந்தன. பையனின் உதடுகளில் ஒரு சின்ன புன்னகை நெளிந்தது.

      அவன் குடிசையை அடையும்போது ஆட்டுக்காரர் போய் விட்டிருந்தார். அவன் குடிசைக்குப் போய் ஆட்டுக்காரர் கொடுத்து வடையை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது வாசலில் பனைவாரில்  மீண்டும் இடித்துக்கொண்டான். பனைவாரில் நெடுக நான்கைந்து இடங்களில் பிய்ந்து போன செம்பட்டை மயிர்க்கற்றைகள் செதில்களுக் கிடையே மாட்டிக் கொண்டிருந்தன. அவை எல்லாம் அவன் ஏற்கனவே இடித்தவை.

     “ பாத்து குனிஞ்சு வரக்கூடாது…?   என்று சொல்லிவிட்டு  அவனுக்கு கஞ்சி வார்த்தாள் அம்மா. "

     “ ஆமா… எவ்ளோதான் குனியறது…? அப்பாவை தூக்கி கட்டச் சொல்லு…” என்று கொல்லிக் கொண்டே வடையுடன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
                         
      
     

No comments:

Post a Comment