குரோமியத்தை வாரி இறைக்கும் சிகரெட்புகை |
பிரான்கோ டைலேட்டேர்ஸ் |
Image Courtesy:Thanks Google
தோல் தொழிற்சாலை பகுதியில் காற்றில் கலந்திருக்கும் மாசு
தோல் தொழிலுக்கும் ஏற்றுமதிக்கும் பிரபலமானது, வேலூர் மாவட்டம். இங்கு தோல்தொழில் கொடிகட்டிப் பறக்கும் நகரங்கள், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு, மற்றும் வேலூர்.
இங்கு மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2006 முதல் 2009 வரை ஆய்வு ஒன்றை நடத்தினார்கள்.
இந்த தோல் தொழிற்சாலைகளுக்கும் ஆஸ்துமா நோய்க்கும் என்ன தொடர்பு ? இந்த தொழிற்சாலைகள் என்னென்ன ரசாயனங்களை வெளியேற்றுகின்றன? இவை எப்படி காற்றை மாசுபடுத்துகின்றன ?
காற்று மாசுபடுவதால் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ? இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ? பெரியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ? வயசாளிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ?
இவற்றைக் கண்டுபிடிப்பதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
யார் இந்த ஆராய்ச்சியை நடத்தியவர்கள் ?
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ஞானசேகரன் மற்றும் குடியாத்தம் அரசு திருமகள் மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த கே.சுப்பிரமணி, ஏ.தமினம் அன்சாரி ஆகிய அறிவியல்வல்லுநர்கள் இந்த அற்புதமான ஆராய்ச்சியை செய்தார்கள்.
அவர்களுடைய கண்டுபிடிப்பு என்னவென்று பார்க்கலாம்.
இந்த ஐந்து நகரங்களில் மக்களைத் தாக்கும் ஆஸ்துமா மற்றும் அதன் உறவுக்கார நோய்களுக்கும் சிவப்புக்கம்பளம் விரித்துள்ளது இந்த காற்றுமாசு.
குழந்தைகள் 10 முதல் 12 சதமும் இளைஞர்கள் 15 சதமும், பெரியவர்கள் 25 சதமும், முதியவர்கள் 8 முதல் 12 சதமும் பாதிக்கப்படுகின்றனர் ஆஸ்த்மாவினால் .
பிரான்கோடைலேட்டர்ஸ் (BRANCHODILATORS) பயன்படுத்தியவர்களில் மிகக்குறைவாக பாதிக்கப்பட்டவர்கள்; முழுமையாக குணமடைந்தனர்: கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் நடுத்தரமாக பாதிக்கப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேருக்கு ஆராய்ச்சிக்காலம் முடிவடைவதற்குள்ளாகவே ஆயுட்காலம் முடிந்துபோனது. அதாவது கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் பிழைக்க வாய்ப்பில்லை எனபதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை.
சரி, பிரான்கோடைலேட்டர் என்றால் என்ன ? இது ஆஸ்துமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள உதவும்; ஒருவகைக் கருவி. ஆந்த கருவிக்குள் இருக்கும் மருந்தை வாயினால் உறிஞ்சி எடுக்க வேண்டும். அந்த மருந்து மூச்சுக் குழலுக்குள் சென்று சுவாசத்துடன் தொடர்புடைய தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தும். காற்று சென்றுவரும் வழியை பெரிதாக்கும். மூச்சுக்காற்று சுலபமாக நுரையீரலுக்குள் உள்ளேயும் வெளியேயும் செல்ல உதவும். ஆக சுவாசத்தை சுலபமாக்க உதவும் கருவி இது.
மிக மோசமான நோய் என்று ஒரு பட்டியல் போட்டால் ஆ ஸ்துமாவுக்குதான் நான் முதலிடம் கொடுப்பேன். மூச்சினை இழுக்கவும் முடியாது. வெளியே விடவும் முடியாது. நெஞ்சு வெடித்துவிடும்போல இருக்கும். பல நேரங்களில் ஆஸ்துமா மருந்துகளை சட்டை செய்யாது. அதன் தாக்குதல் ஒவ்வொருமுறை தொடங்கும்போதும் “நான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்துபோவேன்” என்றே நோயாளிகளை நினைக்க வைக்கும். ஆஸ்துமாவை குணப்படுத்தும் மருந்து என்று எதுவும் கிடையாது. எல்லா மருந்துகளுமே தற்காலிக நிவாரணம்தான் தரும்.
அப்படி என்ன ரசாயனங்கள்தான் தோல்தொழிலகங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் காற்றை மாசுபடுத்துகின்றன ?
குரோமியம்(CHROMIUM), ஈயம்(LEAD) நைட்ரஜன் ஆக்ஸைடு (NITROGEN OXIDE) சல்ஃபர்டை ஆக்ஸைடு (SULPHUR DI OXIDE), ஹைட்ரஜன் சல்ஃபைடு (HYDROGEN SULPHIDE) ஆகியவைதான் கற்றை மாசுபடுத்தும் விஐபி ரசாயனங்கள். அத்தோடு ஆவியாகும் அங்கக ரசாயனங்களும் (VOLATILE ORGANIC CHEMICALS) இங்கு உள்ள காற்றில் கைகோர்த்துள்ளன. இவைதான் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள்.
இதில் குரோமியம்; காற்றை மாசுபடுத்தினால் என்ன நடக்கும் ?
மாசுபடுத்துதல் என்றால் காற்றை அசுத்தப்படுத்துதல் என்று அர்த்தம்.
சொல்லப்போனால் நம் உடல் வளர்ச்சிக்கும் ஓரளவு குரோமியம் தேவை. நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், மாமிசம், குடிக்கும் பானங்கள், ஆகியவற்றிலும்; குரோமியம் துளியோண்டு இருக்கும். இதனை 3 ம் எண் குரோமியம் என்கிறார்கள். மூன்றாம் நம்பர் குரோமியம் என்றால் தொல்லை இல்லாதது என்று அர்த்தம்.
வீரியமான குரோமியத்தை 4 ம் எண் குரோமியம் அல்லது கெட்ட குரோமியம் என்கிறார்கள். நான்கு எண்கொண்ட கெட்ட குரோமியம் அதிகம் இருந்தால் அது சந்தேகமில்லாமல் மனிதர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
தோல்தொழிலகங்கள் குரோமியத்தை வெளியேற்றும். எலக்ட்ரோபிளேட்டிங் செய்தாலும் குரோமியம் வெளியேறும். டெக்ஸடைல்ஸ் தொழிற்கூடங்களும் குரோமியத்தை வெளிப்படுத்தும். கேஸ் நிலக்கரி, எண்ணெய் ஆகியவற்றை எரிக்கும்போதும் கணிசமான அளவு குரோமியம் வெளியாகும்.
சிகரெட் புகைப்பவர்களை நடமாடும் குரோமியம் ஹோல்சேல் டீலர்கள் எனலாம.; செல்லும் இடம் யாவற்றிலும்; குரோமியத்தை வெளியேற்றும்; புண்ணிய காரியத்தை செய்கிறார்கள். சிகரெட்புகை குரோமியத்தை வெளியேற்றி காற்றில் கரைக்கிறது.
இதில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். வெட்டவெளி காற்றில் இருப்பதைவிட வீட்டிற்குள் இருக்கும் காற்றில் 40 முதல் 400 மடங்கு சிகரெட்புகையினால் வெளியாகும் குரோமியம் அதிகம் இருக்குமாம். “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை” அதுபோல “ஒர்வீட்டில் ஒருவர் புகைத்தால் அவர்பொருட்டு சிகரெட் புகை எல்லார்க்கும் வழங்குமாம் குரோமியம்” இது புதிய பாட்டு. புகை வெளியேற முடியாத வீடுகள், மற்றும் கார்களில் சிகரெட் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகஅளவில் 4ம்எண் குரோமியம் இருந்தால் ஆஸ்துமா, இருமல், நாசித்துவார எரிச்சல், தும்மல், இளைப்பு, தோலில் சிறு கொப்புளங்கள் ஆகியவை ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ தோன்றலாம். சிலருக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். சிலருக்கு அதுவே மிதமாக இருக்கும். சிலருக்கு கடுமையாகவும் இருக்கலாம்.
நாம் குடிக்கும் தண்ணீரில் அதிகப்படியான குரோமியம் இருக்கிறதா என்றும் சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். குரோமியம் அதிகம் இல்லாத தண்ணீரை குடிக்க வேண்டும்.
குரோமியம் தொடர்புடைய தொழிலகங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரே உடையை திரும்பத்திரும்ப அணியக்கூடாது. சிலர் கிழியும் வரை துவைப்பதில்லை என்னும் கொள்கையை (குறிப்பாக ஜீன்ஸ் அணிபவர்கள் மன்னிக்கவும்) மாற்றிக்கொள்ள வேண்டும்.
“சிரங்கு இருந்தால் ஒரே வேளை” என்பது சைபால் என்னும் மருந்திற்கான மிகப்பிரபலமான விளம்ப வாக்கியம். அதுபோல காற்று மாசுபட்டிருந்தால் அதற்கு ஒரே மருந்து தாவரங்கள் மற்றும் மரங்கள்தான்.
Image Courtesy:Thanks Google
Reference:
1. http://www.thoracic.org/copd-guidelines/for-patients/what-kind-of-medications-are-there-for-copd/what-are-bronchodilators.php
2.file:///C:/Users/Admin/Downloads/Branchodilators.html
- What Are Bronchodilators?
3.http://www.atsdr.cdc.gov/phs/phs.asp?id=60&tid=17
– Toxic substances Portal – Chromium.
4.
http://jocpr.com/vol2-iss5-2010/JCPR-2010-2-5-153-160.pdf
- Ambient Air Pollution from the Leather Tanneries in Vellore District in
reference to the Asthma – By S.Gnanasekaran, K.Subramani & A.Thaminum
Ansari,
வேம்பு |
Image Courtesy:Thanks Google
No comments:
Post a Comment