Image Courtesy: Thanks Google |
- கொட்டகை இல்லை பரவாயில்லை
- தொட்டி இல்லை பரவாயில்லை
- பெட்டி இல்லை பரவாயில்லை
- நிழல் இல்லை பரவாயில்லை
- கவலை வேண்டாம், திறந்த வெளிகளில் கூட மண்புழு உரம் தயாரிக்கலாம்.
- ஆனால் அந்த இடத்தில் இழை தழை கொடுக்கும் மரங்கள் இருக்க வேண்டும்.
மண்புழு உரம் தயாரிப்பைத் தொடங்கிய பின்னால் கூட மரங்களை நட்டு வளர்க்கலாம்.
பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ், போன்ற தட்டுப்பாடு இல்லாமல் தழை தரும் மரங்கள் உள்ள இடம் பொருத்தமானது.
தேவைப்படும் பொருட்கள்
- திறந்த வெளி; நிலப்பரப்பு (6 x 3 அடி)
- பக்கத்தில் தழை தரும் மரங்கள்
- பிறகு கூட மரங்களை நடலாம்
- உதாரணத்திற்கு பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ்
- மணல் 100 முதல் 120 கிலோ
- தேங்காய் உறி மட்டைகள் எண்ணிக்கையில் 500
- கரும்பு சோகை, வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகள்; - 150 கிலோ
- மாட்டுச்சாணம் - 250 முதல் 300 கிலோ
- தண்ணீர் - 20 முதல் 25 குடம்
- பசுந்தழைகள். 150 கிலோ
- மண்புழு - 2 கிலோ அல்லது எண்ணிக்கையில் 2000
தயாரிக்கும் முறை;
திறந்த வெளியில் ஒரு இடத்தை தேர்வு செய்யவும். 3.5 அடி அகலம், 6 அடி நீளத்திற்கு முளைக்குச்சி அடித்து கயிறுகட்டி மார்க்செய்யவும். முன்குறித்த அளவில் 0.5 அடி ஆழத்திற்கு குழி எடுக்கவும். குழியில் மணலை சீராகப் பரப்பவும். அதன் மீது தேங்காய் உறி மட்டைகளை, முதுகுப் பகுதி கீழே இருக்குமாறு அடுக்குங்கள். பின்னர் 0.5 அடி உயரத்திற்கு வைக்கோல் கரும்பு சோகை அல்லது தாவரக் கழிவை பரப்புங்கள். இதுதான் புழுப்படுக்கை.
புழுப்படுக்ககையின் மீது சாணத்தை கரைத்து சோரத் தெளியுங்கள். அதன் மீது 0.5 அடி கனத்திற்கு மாட்டுச் சாணத்தை பரப்புங்கள். பின்னர் பசுந்தழைகளையும் அதன் மீது தோட்டத்து மண்ணையும் 0.5 அடி உயரத்திற்குப் போட்டு தண்ணீர் தெளிக்கவும். புழுப் படுக்கையில் நான்கு அடி இடைவெளியில் 6 அடி கனமான கம்புகளை செங்குத்தாக நிறுத்தவும். இப்போது ஒரு அடுக்கு புழுப்படுக்கை தயார்.
இதுபோல 5 அடி வரை பல அடுக்குகளைப் போட்டு பழுப்படுக்கையை தயார் செய்ய வேண்டும். பின்னர் புழுப்படுக்கையில் செருகிய கம்புகளை எடுத்து விடவும். கம்புகள் எடுத்த துவாரத்தின் மூலம், புழுப்படுக்கையில் ஏற்படும் சூடும் ஆவியும் வெளியேறும். புழுப்படுக்கையின் மீது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக தண்ணீர் தெளிக்கவும். 75 முதல் 90 நாட்களில் புழுப்படுக்கையில் உள்ள சூடு தணிந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு சதுர அடிக்கு 200 கிராம் மண்புழுக்கள் என்ற அளவில் புழுப்படுக்கையில் விடுங்கள். அதன் பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து மண்புழுபடுக்கை உரமாக மாறுவதைப் பார்க்கலாம். புழுப்படுக்கை முழுவதுமாக உரமாக மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். பின்னர் 3 அல்லது 4 நாட்களில் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்த மண்பழு உரத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
27. உள்ளுர் மண்புழுக்களை சேகரிப்பது எப்படி?
‘மண்புழுக்கள்’ இருக்க கூடிய நிலப்பரப்பை முதலில் தேர்ந்தெடுங்கள். பின்னர் 500 கிராம் நாட்டு சக்கரை அல்லது வெல்லத்தை 20 லிட்டர் நீரில் கரையுங்கள்.
500 கிராம் புதிய சாணத்தை தனியாகக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கரைசல்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்குங்கள். மண்புழுக்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த நிலப்பரப்பில் சாண-வெல்லக் கரைசலைத் தெளியுங்கள். பின்னர் கரைசல் தெளிந்த மண்பரப்பில் வைக்கோல் அல்லது உலர்ந்த சருகுகளைப் பரப்புங்கள்.
அதன் மீது சாணத்தை பரப்புங்கள். ஒரு பழைய சாக்கு அல்லது கோணியைப் போட்டு அந்த இடத்தை மூடுங்கள். பின்னர் 10 முதல் 15 நாட்களுக்கு அந்தப் பகுதியில் தண்ணீர் தெளியுங்கள். நிலப்பரப்பின் அருகிலும் நிலத்தின் அடிப்பகுதியிலும் இருக்கும் மண்புழுக்கள், வெல்லம்-சாணக் கரைசல் தெளித்த இடத்தில் ஏறி வரும். இந்த மண்புழுக்களை சேகரித்து மண்புழுஉரம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
Image Courtesy: Thanks Google |