Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, February 14, 2016

சிலை - சிறுகதை

சிலை
(சிறுகதை )

      இன்ஸ்பெக்டர் சாது செல்லையா டி.எஸ்.பி. க்கு  அடிக்கும் சல்யூட்டை அம்பலத்தரசனுக்கு அடித்தார்.

      கச்சேரியில் புதுசாய் சேர்ந்திருந்த, கான்ஸ்டபிள் பொன்னையா கலவரப்பட்டவராய் டீயோ… காபியோ … வாங்க ஓடினார்.

அம்பலத்தரசன் எதிர் கட்சியை சேர்ந்த உள்ளுர் தலைவராக இருந்தாலும், கோட்டையூரைப் பொருத்தவரை அப்படி ஒரு செல்வாக்கு இருந்தது.

       அம்பலத்தரசன் பொதுக் கூட்டமென்று மேடையேறி மைக்கை பிடித்துவிட்டால் எதிர்கட்சிகாரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.

      இதுதவிர ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன், சினிமா தியேட்டர், கள்ளச்சாராயம், இவை சம்மந்தப்பட்ட ஆசாமிகளும், கதிகலங்குவார்கள்.

      அப்படிப்பட்ட ஆசாமி இப்படி திடுதிப்பென்று போலீஸ் ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்தால், இன்ஸ்பெக்டர் சாது செல்லையா என்ன செய்வார்…?

      'உங்கள அடிச்சுட்டானா…?  யாரு… சோன்பப்டி விக்றமாதிரி இருப்பானே… அவனா…?'  என்றார் இன்ஸ்பெக்டர்.

      'ஆமா… ஆமா…  அவனேதான். ஆவன் பேரு என்ன…?"  திரும்பி தன்னுடன் வந்திருந்த தம்பிகளைப் பார்த்தார்.

      அவருக்குப் பின்னால் நின்றிருந்த நாலைந்து தம்பிகளும் கோரஸ்ஸாய் சொன்னார்கள்  “ ஒலகங்காத்தான். “

      'நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க சார். ஒலகங்காத்தானாம் ஒலகங்காத்தான். இந்த ஒலகத்துல இனி அவன ஒரு பயலும் காப்பாத்த முடியாது…. முட்டியப் பேத்துடறேன்…. நீங்க காப்பி சாப்பிடுங்க சார்.."
      அண்ணன் அம்பலத்தரசனும், தம்பிகள் நால்வரும் காப்பி குடித்தனர். 'நாங்க மட்டும் அப்போ அண்ணன்கூட இருந்திருந்தா கொலையே விழுந்திருக்கும்…” தம்பிகள் ஆவேசப்பட்டனர்.

      ஆம்பலத்தரசன் அவர்களை கையமர்த்திவிட்டு நடந்ததை விளக்கமாகச் சொன்னார்.

      'காலைல ஒரு எட்டுமணி இருக்கும்….நான் வீட்லேர்ந்து கௌம்பி சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்தேன்…  பெரு வட்டம் தர்மராஜ் அண்ணன் (ஆளுங்கட்சியின் உள்ளுர் தலைவர்) உட்கார்ந்து இருந்தாரு… வணக்கம் சொன்னேன்… அவரும் வணக்கம் சொன்னாரு… சரின்னிட்டு நானும் போயி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்… ஒரு அஞ்சி நிமிஷம் இருக்கும்.. இந்த ஒலகங்காத்தான் அங்கு வந்தான்….கிட்ட வந்து எங்கண்ணனைப்பற்றி நீ என்னடா மீட்டிங்ல பேசினேன்னு கேட்டுக்கிட்டே வந்து சட்டுண்ணு கன்னத்துல பொறி கலங்கறமாதிரி அடிச்சுட்டு ஓடிட்டான்…. எல்லாம் கண்ணை மூடி கண்ணைத் தொறக்கறதுக்குள்ள நடந்துடுத்து…"

      எழுதிய கம்ப்ளயிண்ட்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் அம்பலத்தரசன்.

      'அதுக்கு பெருவட்டம் தர்மராஜ் ஒண்ணும் கேக்கலையா…?" கேட்டார் இன்ஸ்பெக்டர்.

      'அவரு காலுல போட்டுக்கிட்டு இருந்த செருப்பைக் கழட்டி அவன் மேல வீசி எறிஞ்சாரு … அவன் ஓடிப் போயிட்டான்…."

' பெருவட்டம் பேர்ல உங்களுக்கு  ஏதாவது சந்தேகம் இருக்கா…?"

      'அவரு ஆளுங்கட்சிக் காரரு…  நான் எதிர்க்கட்சிக் காரன்.  அப்பப்போ … பப்ளிக் மீட்டிங்ல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிப் பேசறது சகஜம்தான்…. .ஆனா தனிப்பட்ட முறையில எனக்கும் அவருக்கும் எந்த தகறாரும் இல்ல… அவரும் அப்படி நடந்துக்க மாட்டாரு…."            

      கடலைவிட ஆழமானது எது என்று கேட்;டால் எல்லாரும்; பெண்களின் மனசு என்பார்கள். ஆனால் கோட்டையூர்க் காரர்களிடம் கேட்டால் அது பெருவட்டம் என்றுதான் சொல்வார்கள்.

      அவருக்கு நெருக்கமானவர்கள், அவர் பம்முவதற்கும், தும்முவதற்கும் கூட தனித்தனி அர்த்தம் சொல்வார்கள்.

      அவருக்கு சொந்தமாக ஒரு விறகுக்கடை வைத்திருந்தார். அவருக்கு கட்சிப் பணிமனையாகவும் அது பயன்பட்டது. பெருவட்டம் அரசியல் அத்தனையும் அங்குதான் நடக்கும்.

      பெருவட்டம் தர்மராஜ்ராஜ் அந்த ஊர் எம்.எல்.ஏ. வை விடவும் செல்வாக்கானவர். இன்னும் சொல்லப் போனால் மந்திரிகளைவிட, இவருக்கு செல்வாக்கு உண்டு. கொல்லைப்புற வழியாக (ராஜ்யசபை) அமைச்சராகப்; போகிறார் பெருவட்டம் என்று பத்திரிகையில் கிசுகிசுக்கள் கசிந்;து கொண்டிருந்தன.

      சாலையில் அம்பலத்தரசனை அடித்துவிட்டு ஓடிப்போன உலகங்காத்தான் மெதுவாக விறகுக் கடைக்குள் நுழைந்தான்.
      'என்னடா  சொத்த அடி அடிக்கறே…. அடிக்கற அடியை ஆயுசுக்கும் அவன் மறக்கக் கூடாது…." என்றார் பெருவட்டம்.

      உலகங்காத்தான் தலையை சொறிந்துக்கொண்டு அமைதியாகச் சொன்னான்.

      'அவுங்க போலிஸ் கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்காங்களாம். ..”
      'சரி…. சரி …நான் பாத்துக்கறேன். இன்னக்கி போஸ்ட்டர் ஒட்ட நீ போக வேணாம். ரெண்டு நாளைக்கி வீட்லயே கெட…"

      'சரிங்கண்ணே…."

      உலகங்காத்தான் வெளியே போனான்.

      போன் மணியடித்தது….

      'அலோ… வணக்கம்… நான்தான் தர்மராஜ்ராஜ் பேசறேன்….”

      'தலைவரே வணக்கம்… நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்…”

             "வணக்கம்… வணக்கம்… இன்ஸ்பெக்டர் சாரு … எப்பிடியிருக்கீங்க…?"
           'நல்லா இருக்கேன் தலைவரே….'

      ரொம்ப நல்லதுங்க… என்னா சமாச்சாரங்க…? “

      'தலைவரே நம்ம ஒலகங்காத்தான்  பேர்ல ஒரு கம்ப்ளயிண்ட் வந்திருக்கு… அதான் ஒங்ககிட்ட ஒரு வார்த்தை…. கேட்டுகிட்டு …”  இழுத்தார் இன்ஸ்பெக்டர்.

      'இன்ஸ்பெக்டர் சார் என்னை உங்களுக்கு எத்தனை வருஷமாகத் தெரியும்..?"

      'என்னங்க இப்பிடி கேட்டிட்டீங்க….? உங்கள எனக்கு  பதனஞ்சி வருஷமா தெரியும் … நேரடிப் பழக்கம்…. அதுக்கு முன்னாலயே ஒரு பத்து வருஷமா உங்களப்பத்தி கேள்விப் பட்டிருக் கேன்ல…?

      'பின்ன என்னங்க…? இந்த மாதிரி கேள்விய எங்கிட்ட கேக்கறீங்க…? உங்க நிர்வாகத்துல நான் தலையிட மாட்டேன். உங்களுக்கு சட்டம் என்ன சொல்லுதோ அதைச் செய்யுங்க…" போனை டக்கென்று வைத்தார் பெருவட்டம்.

      'இன்;பெக்டருக்கு எவ்ளோ கொழுப்புன்னா, ஒலகங்காத்தான அரெஸ்ட் பண்ணப்போறேன்னு எங்கிட்டயே சொல்றான்… அநேகமாக அவனை சாயங்காலம் மூணு மணிக்குள்ள அரெஸ்ட் பண்ணிடுவான்னு நெனைக்கறேன்…. நீங்க நாலு மணிக்கெல்லாம் போயி ஜாமீனில் எடுத்துக்கிட்டு  வந்திடுங்க…" எனறார்  தர்மராஜ.;

      'சரிங்கண்ணே…” தம்பிகள் உடனடியாக தயாரானார்கள்.

அம்பலத்தரசன் வீடு.
அங்கு ஒரு குட்டி மந்திராலோசனை நடந்துக் கொண்டிருந்தது.
ஒரு தம்பி அவசரமாக ஓடிவந்தார்….

      'அண்ணே… அண்ணே…. ஓலகங்காத்தானை அரெஸ்ட் பண்ணிட்டாங்கண்ணே…" சந்தோஷமாக சொன்னான்.

      'யார்டா சொன்னது… ?"; அம்பலத்தரசன்.

      'நானே பார்த்தேன் அண்ணே… பெருவட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கே போன் பண்ணி அரெஸ்ட் பண்ணச் சொல்லிட்டாராம்….!"

      'நான் சொல்லல….?  இதுக்கும் அவருக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இருக்காதுன்னு…" அப்பாவியாய் சொன்னார் அம்பலத்தரசன்.

      போலீஸ் ஸ்டேஷன்.

      பெருவட்டம் தர்மராஜ் தம்பிகள் உலகங்காத்தானை பெயிலில் எடுத்தார்கள்.

      இன்ஸ்பெக்டர் காதும்காதும் வைத்தமாதிரி; சொன்னார். 'நான் அண்ணன்கிட்ட கேட்டுக்கிட்டுதான் கேஸ் பைல் பண்ணேன்…..” பெருவட்டத்தின் தம்பிகளிடம் சொன்னார்.

      'அண்ணன் கண் முன்னாலேயே நடந்திருக்குன்னா… அண்ணன் கண்டுக்காம விட்டிடுவாரா…?" அண்ணன் நேர்மையை புகழ்ந்தார் ஒரு தம்பி.

      'இருந்தாலும் அண்ணன் உங்க பேர்ல ரொம்ப கோபமா இருக்காரு…” என்றார் தம்பி நெம்பர் இரண்டு.

      தம்பிமார்கள் உலகங்காத்தானுடன் கோபமாக வெளியேறி னார்கள் போலீஸ் ஸ்டேஷனைவிட்டு.

      போலீஸ்காரர்கள் அரெஸ்ட் செய்தது சரியா தப்பா  என்று பட்டிமன்றம் நடத்தினார்கள். நடுவராக இருந்தும் தீர்ப்பு சொல்ல முடியாமல் தடுமாறினார் இன்;பெக்டர் சாது செல்லையா.

      நாட்கள் நகர்ந்தன. தேர்தல் கூப்பிடும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. தம்பிமார்கள் கடைத் தெரு கலெக்ஷனை ஆரம்பித்தார்கள். ஒழிகவாழ்க கோஷமிட்டார்கள். கட்டிப்போன தொண்டைக்கு மாப்பிள்ளை விநாயகர் சோடா குடித்தார்கள். கொடி ஏற்றினார்கள்…  மாறி மாறி போஸ்ட்டர் ஒட்டினார்கள்.

      விறகுக்கடை சம்பவமும் உலகங்காத்தானையும் எல்லோரும்  மறந்து விட்டிருந்தார்கள்.

      பெருவட்டம் தர்மராஜ் மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்;.
      கட்சியின் கொடியேந்தியபடி ஊர்வலத்தின் முகப்பில் அலங்கரிக்கப்பட்ட யானை…. அதன் பின்னால் வெள்ளை சீருடை அணிந்த தொண்டர்கள் …. அதற்கும் பின்னால் பச்சைப் புடவை பெண்கள் அணி… காக்கி யுனிபார்ம் மாணவர்கள் அணிஇ நீலசட்டைகளில் தொழிற் சங்க அணி. ஊர்வலம் ஒரு இடத்தை தாண்டிச் செல்ல  மூன்று மணி நேரம் ஆனது.

      'கோட்டையூரில் வரலாறு காணாத பேரணி” என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி போடுமளவிற்கு ஊர்வலம்  பிரமாண்டம்.

               ஊர்வலம் மலைப் பாம்பைப் போல் வளைந்து நெளிந்தது. 'வாழ்க… ஒழிக" கோஷங்கள் வானைப் பிளந்தன…

      ஊர்வலம் கோட்டையூர் அருகாமையில் இருந்த காந்தி சிலையை அடைந்த போது பத்து பதினைந்து சோடா பாட்டில்கள் பறந்தன. அவற்றைத் தொடர்ந்து சரஞ்சரமாக சரளைக் கற்கள்.

      முகம் தெரியாத ஒரு கலவரம். கத்தி, கடப்பாரை, வெட்டறிவாள், குத்தீட்டி இப்படி பெயர் தெரியாத ஆயுதங்களை ஏந்தி கும்பல் ஒன்று கண்ணில்பட்டவர்களை எல்லாம் தாக்கினார்கள். மக்கள்; மூலைக்கொருவராய் சிதறி ஓடினர்.

      நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் போலீஸ் விரைந்து வந்து கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

      மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  உலகங்காத்தான் இறந்து போனான்.

      கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று அம்பலத்தரசன் கட்சிக் காரர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

      அம்பலத்தரசன் நடந்து முடிந்த வன்முறை சம்பவங்களுக்கு தார்மீகப் பொருப்பேற்;று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். குற்றம் செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

      தேர்தல் ஒரு வாரம் இருக்கும் போது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடந்தது. கோட்டையூர் பஜாரில் காந்தி சிலைக்கு அருகாமையில் உலகங்காத்தான் சிலையை பெருவட்டம் தர்மராஜ் திறந்து வைத்தார்.  அந்தக் கூட்டத்திற்கு அம்பலத்தரசன் தலைமை வகித்தார்.

      அப்போது இருவருமே ஒரே கட்சியில் இருந்தார்கள்.

தேர்தல் வெற்றிக்காக தனது கட்சித் தலைவரே தன்னை காவு கொடுத்ததை  வெளியே சொல்லாமல் உலகங்காத்தான் காந்தி சிலைக்கு அருகில் சிலையாக நின்றிருந்தான்.
     .                    

         

Thursday, February 4, 2016

மலிவான கால்நடைத்தீவனம் - கட்டுரை

              
மலிவான கால்நடைத்தீவனம் 
                                                                         கட்டுரை 

      பால்மாடு வளர்ப்பதில் பெரிய பிரச்சனை தீவனம்தான். அதிலும் கோடைக்காலத்தில் ரொம்ப பிரச்சனை. தீவனம் சுத்தமா  கிடைக்காது. விலை ரொம்ப அதிகம். அதை காசுபோட்டு வாங்கி மாட்டுக்கு போட்டு பால்கறந்து விற்றால் கட்டுப்படி ஆகக்கூடிய விலை கிடைக்காது.
      
இது ஒண்ணும் அவ்ளோ பெரிய பிரச்சனையே இல்லை. சுலபமா சமாளிக்கலாம். கோடையிலயும் தீவனம் போடலாம். பால்கறக்கலாம். பால் விற்கலாம். லாபம் சம்பாதிக்கலாம். பால்மாடு வளர்க்கறவங்கள கேட்டா கதை கதையா  சொல்லுவாங்க, “புல் இல்லை சார். வைக்கோல் இல்லை சார். கிடைச்சாலும் விலை அதிகம் சார். “ அப்படின்னு  சொல்லுவாங்க. கையில் வெண்ணைய வச்சிக்கிட்டு, நெய் தேடி அலையறது இதுதான். நம்மகிட்ட என்ன இருக்குன்னு நமக்கு தெரியாது. கோடையில புல் எல்லாம் பொசுங்கிப் போயிடும். புல்லு கெடைக்காது. ஆனா மரங்கள் இருக்கும். மர இலைகள போடலாம்.  அசோலா ஒரு நீர்த் தாவரம். அற்புதமான தீவனம். அதப் போடலாம்.அசோலா எங்க கிடைக்கும் ?  இது எந்த கடையிலயும் வாங்க முடியாது. ஆனா அதை நாம்பளே உற்பத்தி செய்யலாம். இதைச் செய்யறது ஒண்ணும் பிரமாதம் இல்ல.

      மாட்டுக்கு ஒரு கிலோ புண்ணாக்கு பேடறதும், ஒரு கிலோ அசோலா போடறதும் ஒண்ணுதான்.“அப்படின்னா புண்ணாக்கே போடறோம் சார்" அப்படீன்னு சொல்லுவீங்க. ஆனா ஒரு கிலோ புண்ணாக்கு வாங்க 40 லிருந்து 50 ரூபா அழனும். அசோலா ஒரு கிலோ உற்பத்தி செய்ய, ஒரே ஒரு ரூபா  மட்டும்தான் செலவாகும். அப்படி இருக்கும்போது  ஏன் அசோலாவை யாரும் உற்பத்தி செய்யல ?  ஏன் மாட்டுக்கு போடல ? அதுக்கு  காரணம் ஒண்ணு அசோலாவைப் பற்றி அவுங்களுக்குத் தெரியாது.  ரெண்டாவது ஏதாவது சுலபமா கிடைச்சா  நம்ம ஜனங்க அதை மதிக்க மாட்டாங்க. இலவசமாக கிடைத்தாலும் மதிக்கமாட்டாங்க.
   
   நல்ல அரிசியக்கூட ரேஷன்ல போட்டா,  ரேஷன் அரிசியா ?  எளக்காரமா கேட்பாங்க 'எங்களுக்கு குடும்ப டாக்டர் குப்புசாமிதான். தொட்டுக்கூட பார்க்க மாட்டார். எந்த நோவா இருந்தாலும் ஊசிதான். நூறு ரூபா வச்சிடணும். அவ்ளோதாள்  நாங்க காசு பாக்கறது இல்ல சார்…" நிறையபேர் இப்படித்தான். நிறைய காசு செலவு பண்ணணும். அதை விளக்கமா நாலுபேர்கிட்ட சொல்லணும். அப்பொதான் நிம்மதியா இருக்கும்.

      ஊசி போடாத டாக்டர் மாதிரி இந்த அசோலா. நாற்பது ரூபா செலவு பண்ற எடத்துல, ஒரு ரூபா செலவு பண்ணா போதும். மரத்தழைகளுக்கு அதுகூட செலவு இல்லை. சில பேருக்கு சாதாரண தும்மல் வந்தாக்கூட, குடும்ப டாக்டருக்கு குத்து மதிப்பா ஒரு 500 ரூபா குடுத்துட்டு வந்தாதான் மனசு நிம்மதியா இருக்கும். அசோலா மாதிரி, மரத்தழைகள் மாதிரி, தீவனத்தின்மேல் மரியாதை வராததுக்குக் காரணம் இருக்கு.  அது என்னன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இதுக்கு முக்கியமான காரணம் பொதுவாக நமக்குப் பணம்  அல்லது நிதி பற்றிய அறிவு குறைவு. அதைப்பற்றிய விழிப்புணர்வு குறைவு.

      'உங்க மாடு எவ்ளோ கறக்குதும்மா…?"

      அதை கரெக்டா சொல்லுவாங்க. 'காலைல 7 லிட்டர் சார். சாயங்காலம் 5 லிட்டர் சார்"   'உங்க மாட்டுக்கு என்ன போடுறீங்க ? 'புல்லு போடறோம் சார். புண்ணாக்கு போடறோம் சார். பூசா போடறோம்;  சார்"  அதெல்லாம் கரெக்டா சொல்லுவாங்க'  ஏம்மா இந்த புல்லு, புண்ணாக்கு, பூசா --இதுக்கெல்லாம் எவ்ளோ ஒரு நாளைக்கு செலவாகுதுன்னு தெரியுமாம்மா ?" “புல்லு எங்க தோட்டத்துல புடுங்கி போடறோம் சார். ஆனா மத்த ரெண்டும் காசு குடுத்துதான் சார் வாங்கிப் போடறோம். ”

      'அதாம்மா அதுக்கு எவ்ளோ காசு கொடுத்து வாங்கறீங்க…?"

      “ இந்த கேள்விக்கு அவுங்களால பதில் சொல்ல முடியாது. அதுக்கு என்ன பதில் சொல்வாங்கன்னு யோசிங்க. ”   இது எனக்கு தெரியாது சார்.  அதுக்குதான் தெரியும்   ஏம்மா அதுக்குத்தான் தெரியும்ன்னா ?  மாட்டுக்கா  தெரியும் ? “இல்ல சார்…  எங்க ஊட்டுக்காரர் சார்.  அதுக்கு அதை வாங்க  எவ்ளோ குடுக்குதுன்னு அதுக்குதான் தெரியும்” மாட்டுக்கும் ‘அது’தான் புருஷனுக்கும் அதுதான்.  “ சரி ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்ளோ செலவு பண்றீங்கன்னு சொல்ல முடியுமா ?” இந்த கேள்விக்கு “அது வந்து சார். அது வந்து சார்”  நான் கேட்டேன். “ ஏம்மா இது அதுக்காவது தெரியுமா ? அதை கேட்டு சொல்றியா ?   அதுக்கு அந்தம்மா சொல்றாங்க !  “அது அதுக்குக்கூட தெரியாது சார   பிரச்சினையே இதுதான். நாம் எவ்ளோ செலவு செய்றோம் ? தெரியாது ? எவ்ளோ வருமானம் ? தெரியாது. எவ்ளோ லாபம் ?  யாருக்குத் தெரியும் ? வரவு எட்டணா செலவு செலவு பத்தணான்னு நம்ம தொழில் இருந்தா, அது கறவை மாடா இருந்தாலும் சரி, காய்கறி சாகுபடியா இருந்தாலும் சரி, கரையேற முடியாது சாமி.

      இப்போ நாம் அசோலா உற்பத்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

      அசோலா ஒரு நீர்த்தாவரம்ன்னு சொன்னேன். ஒரு கிலோ புண்ணாக்கும், ஒருகிலோ அசோலாவும், ‘சமம்’ன்னு சொன்னேன். ஆனா புண்ணாக்கு ஒரு கிலோ நாப்பது ரூபா, அசோலா  ஒருகிலோ ஒரு ரூபா ன்னு சொன்னேன். அதை எப்படி தயார் செய்யறதுன்னு பார்க்கலாம். வீட்டுக்கு முன்னாடியே  10 க்கு 3 ½ அடி அகலத்துக்கு ஒரு இடம் வேணும். அதுக்கு மேல ஒரு சின்ன கொட்டகை. அதாவது வெயிலோ மழையோ பாத்தி மேல அடிக்கக் கூடாது. இந்த அளவு பாத்தியில ஒரு நாளைக்கு 500 கிராம் முதல் ஒரு கிலோ வரைக்கும் அசோலாவை உற்பத்தி செய்யலாம்.
      

இதுக்கு என்னென்ன பொருட்கள் தேவைன்னு பார்க்கலாம். 

  • ஒரு 5 கிலோ புதிய சாணம், செம்மண் 5 கிலோ, 10 முதல் 12 குடம் தண்ணீர், சூப்பர் பாஸ்பேட் 5 கிராம். ஒரு சில்பாலின் தாள் பாத்தியின் அளவைவிட கொஞ்சம் பெரியதாக. செங்கற்கள் 50. போதுமான மணல். கைப்பிடியளவு அசோலா. அவ்வளவுதான்.

  •  பத்துக்கு மூன்றறை அடிக்கு முளை அடிச்சு பாத்தியை  மார்க் பண்ணிக்கணும். அதுல அரை அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி அப்புறப் படுத்தணும். அதுக்குள்ள சீராக மணலைப் பரப்ப வேண்டும். பாத்தியின் ஓரங்களில், செங்கற்களை நீளமான பகுதி கீழே இருக்குமாறு நீளவாட்டில், அடுக்க வேண்டும். அதாவது பாத்தியின் நான்கு பக்கமும்,  செங்கற்கள வேலி போல அடுக்கணும்.
  • இப்போது பாத்திக்குள், பாலித்தீன் தாளைப் பரப்ப வேண்டும். பாத்திக்குள் ஊற்றும் தண்ணீர் வெளியே போகக் கூடாது. ஐந்து கிலோ சாணத்தை போதுமான தண்ணீரில் கரைத்து, பாத்தியினுள் ஊற்றுங்கள். அதேபோல் 5 கிலோ செம்மண்ணையும், தண்ணீரில் கரையுங்கள். பின்னர் பாத்தியினுள் ஊற்றுங்கள். ஐந்து கிராம் சூப்பர் பாஸ்பேட்டையும், கரைத்து பாத்தியினுள் ஊற்றுங்கள்.  கடைசியாக கைப்பிடி அளவு அசோலாவை பாத்தியில் இடவும். அசோலா இரண்டாம் நாளிலிருந்து பல்கிப் பெருக ஆரம்பிக்கும்.
  •  சுமாராக ஒரு வாரம், பத்து நாளிலிருந்து அறுவடை தொடங்கலாம். அறுவடை செய்த அசோலாவினை நல்ல தண்ணீரில் முதலில் கழுவ வேண்டும். பிறகு மாட்டுக்குப் போடலாம். அசோலாவை சாப்பிட மாடுகளை பழக்கப் படுத்த வேண்டும். முதலில் புண்ணாக்கு அல்லது தவிட்டுடன் கலந்து போட வேண்டும். அல்லது அசோலாவுடன், கொஞ்சம் வெல்லம் கலந்து கொடுத்தால், மாடுகள் விரும்பி சாப்பிடும். உப்பு கலந்தும் கொடுக்கலாம்.; மாடுகள் ரசித்து ருசித்து சாப்பிடும்.
  •  15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை பாத்தியிலிருந்துது பழைய தண்ணீரை வடிக்க வேண்டும் அதற்கு பதிலாக புதியதாக தண்ணீரை விட வேண்டும்.
  •  மாதம் ஒரு முறை, சாணம் மற்றும் செம்மண்ணை எடுத்துவிட்டு புதிதாக சேர்க்க வேண்டும். மறக்காமல் ஐந்து கிராம் அல்லது ஒரு தீப்பெட்டி அளவு சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும்.
  • பாத்தியில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாத்திக்குள் வடிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மாட்டுக்கு மட்டும்தான் போடலாமா ? அப்படீன்னு ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்கள் சந்தேகம் நியாhயமான சந்தேகம்.  ஆட்டுக்குப் போடலாம். முயலுக்குப்போடலாம். கோழிக்குப் போடலாம். மீனுக்கும் போடலாம்,
  •  ஏன் ? நாம் கூட சாப்பிடலாம். கீரை அடை, கீரை போண்டா, கீரை வடை, கீரை தோசை, எல்லாத்துக்கும் பயன்படுத்தலாம். உபயோகப் படுத்தும்போது, நல்லா கழுவிவிட்டு பயன்படுத்தணும்.
  •  ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் இரண்டு பாத்திகள் இருக்க வேண்டும். ஒன்று மண்பழு உற்பத்தி பாத்தி. இன்னொன்று அசோலா பாத்தி. இரண்டும் உங்கள் செலவைக் குறைக்கும்.
      

தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி - கட்டுரை


தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி
                                                                          கட்டுரை 
                                                                      
         மழைநீர் அறுவடை என்பது, பெய்யும் மழைநீரை, மண்ணில் ( அ) நிலத்தடியில்,  (அ ) மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து, தேவையானபோது அதனை பயன்படுத்துவது என்று அர்த்தம்.

      ஆறுகள் குளங்கள் மற்றும் ஏரிகள் மூலம் மனித உபயோகத்திற்கு, உலகம் முழுவதும் கிடைக்கும் நீரின் அளவு ஒரே ஒரு சதம்   மட்டுமே.

      இந்தியாவில் நமது கைகளுக்கு கிடைக்காமல் ஓடிப்போகும் உபயோகப் படாத நீர் 85  சதவிகிதம்.

      ஒருவேளை கிடைத்தாலும், கிடைக்கும் என்ற நிலையில் பூமிக்கடியில் நமக்காக காத்திருக்கும் நீர் 7 சதவிகிதம்.

      சூரியனின் சுடுகதிரால் ஆவியாக பறந்து போவது 5 சதவிகிதம்.  நமக்கு உபயோகம் ஆவது 3 சதவிகிதம்.

      சாதாரண ஒரு வீட்டின் கூரையில் அறுவடை செய்யும் நீர் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு ஆண்டுத்தேவையை சரிகட்டும்.

      குறைவான செலவில் தமது தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி மழைநீர் அறுவடை மட்டும்தான்.

      இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில், இன்னும்கூட 70 சதவிகித  மக்கள் வசிப்பது கிராமங்களில்தான்.

      கலங்கல் தன்மை,   நிறம், மற்றும் நுண்ணுயிரையும், மணல் வடிகட்டி, வடிகட்டிவிடும்.

      இப்படி அறுவடை செய்த நீருடன் குளோரின் மாத்திரைகளை போட்டு சுத்தம் செய்யலாம். இந்த தண்ணீர் பாதுகாப்பானது. இதனை குடிக்கவம், சமைக்கவும் பயன்படுத்தலாம்.
   
கூரை நீர் அறுவடை

      சில நாடுகளில் மழை பன்னிரண்டு மாதங்களும் பரவலாக பெய்யும், ஆனால் நம் நாட்டில் கிட்டத்தட்ட 70 சதவிகித மழை நான்கு மாதங்களில் பெய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்கிறது.

      மர இலைகளும், பறவைகள் எச்சமும், மழை அறுவடை செய்யும் கட்டிடங்களிpன் கூரைகளை அசுத்தம் செய்துவிடும். அதனால் மழைக் காலங்களில் இந்தக் கூரைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கூரையிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களில் மைக்ரான் அல்லது 10 எம்.எம். முதல் 10 எம்.எம். வரையான கம்பிவலைகளைப் பொருத்தலாம். இது தண்ணீருடன் செல்லும் தூசு துரும்புகளை தடுத்து நிறுத்தும்.

      முதன் முதலாகப் பெய்யும் மழைநீரை 10 நிமிடங்களுக்கு சேமிக்காமல் விட்டுவிடலாம். இந்த 10 நிமிட மழை கூரையை நன்கு கழுவி சுத்தப்படுத்திவிடும். அதன்பின்னர் சேகரமாகும் நீர் சுத்தமாக இருக்கும்.

      இப்படி கூரைநீரை சேகரித்து, அதனை வடிகட்ட வேண்டும். இதற்கு ‘ ரெடிமேட் ஆக மணல் வடிகட்டிகளை  சில கம்பெனிகள் விற்பனை செய்கின்றன.

      இவற்றை நாமே தயாரிக்கலாம். ஒரு சிறிய பெட்டி அல்லது தொட்டியை வடிகட்டியாக பயன்படுத்தலாம். இதில் அடிப்பகுதியில்      5 முதல் 25 செ.மீ. உயரத்திற்கு பெரிய ஜல்லி கற்களை போட வேண்டும். அதற்கு மேல் 5 முதல் 10 செ.மீ. உயரத்திற்கு சிறு ஜல்லிக்  கற்களை நிரப்ப வேண்டும். அதற்கும் மேல் 10 மி.மீ. உயரத்திற்கு மணலை நிரப்ப வேண்டும். இதுதான் மணல் வடிகட்டி. இதை நாமே கூட தயாரிக்கலாம்.

      இறுதியாக மணல் போட்டு நிரப்பிய குழியை. ஒரு பாலித்தீன் தாளைப் போட்டு மூட வேண்டும். அதன்மீது மண்ணைப் பரப்ப வேண்டும். மழைநீர் இறங்குவதற்கேற்ப அந்த பிளாஸ்டிக் தாளில், ஓட்டைகள் செய்து வைக்க வேண்டும்.

      மழைக் காலத்தில் பெய்யும் மழைநீர் நீர் உறிஞ்சு குழியில் இறங்கும் பின்னர் அடிப்பகுதி குழாய்மூலம், கிணற்றில் வடியும். நீர் உறிஞ்சுக் குழியில்  பொருத்தப்பட்டுள்ள குழாயின் நுனியில் கம்பிவலைச் சல்லடையைப் பொருத்த வேண்டும். இதனால் நீர் உறிஞ்சுக் குழியி லிருந்து மணலோ மண்ணோ கிணற்றுக்குள் போகாது.

      150 சதுர மீட்டர் அளவுள்ள வீட்டுக் கூரைமூலம் எவ்வளவு      நீரை அறுவடை செய்யலாம்?

      தமிழ்நாட்டில் மிகக்குறைவாக மழைபெறும் மாவடடம் தூத்துக்குடி. ஆண்டுசராசரி மழை அங்கு கிடைப்பது 655.7 மி.மீ.      656 மி.மீ. என்று வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு நீரை அறுவடை செய்யலாம் என்று பார்க்கலாம்.

      கூரை பரப்பளவு 150 சதுர மீட்டர். ஆண்டு சராசரி மழை 656 மி.மீ.  அல்லது   0.656 மீ. ஆக அறுவடை ஆகும் மொத்த நீரின்அளவை  கண்டுபிடிக்க             கூரை பரப்பளவை     கிடைக்கும்மழைஅளவால் பெருக்க வேண்டும்.  அதனை  1000 லிட்டரால் பெருக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு கனமீட்டரில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். ஆக 150 சதுர மீட்டர்  பரப்பளவு
கொண்ட  கூரையின்  மூலம் மொத்தம்  98400 லிட்டர்  அறுவடை செய்ய முடியும்.

      ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு குடிக்கவும் சமைக்கவும் தேவைப்படும் நீரின் லிட்டர் அளவு 10 லிட்டர்.

      ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்குத் தேவைப்புடும் நீரின் அளவு எவ்வளவு என்று பார்க்கலாம்.

      ஆறு பேறுக்குத் தேவைப்படும் நீர் 60 லிட்டர்.  ஓராண்டுக்குத் தேவைப்படும் நீர் 21,900 லிட்டர் மட்டுமே. ஆனால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 98,400 லிட்டர்.   


விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை - கட்டுரை

                       
விதைப்பதுமில்லை 
அறுப்பதுமில்லை
  கட்டுரை
   
அலக்ஸாண்டர் என்பவர் யார் ? அவர் ஒரு மாவீரன். குதிரையும் யானையும் அலக்ஸாண்டரின் நடைவண்டிகள். வேலும் வாளும்தான் அலக்ஸாண்டரின் நோட்டு புத்தகங்கள். தலைக்கவசமும் மார்புக் கவசமும்தான் அவ ரின் சீருடைகள். போர்க்களங்கள்  விளையாட்டு மைதானங்கள். கிரேக்க ஞானி அரிஸ்ட்டாட்டில்தான் அலக்ஸாண்டரின் பள்ளிக்கூடம்.

      அலக்ஸாண்டர் மாவீரன் மட்டுமல்ல. ஒரு சிறந்த வைத்தியனும்கூட. ஒரு கரித்துண்டை கையில் கொடுத்தால் கூட  பாறைகளில் கவிதைகள் மாதிரி ஓவியம் தீட்;டுவதில் வல்லவர் அலக்ஸாண்டர்.

      அலக்ஸாண்டர் ஒரு மாவீரன் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு ஞானியும் கூட. அறுவது வயதில் ஞானிகள் உணர்ந்ததை அவர் முப்பது வயதில் உணர்ந்தார்.
   
      எதை எடுத்துவந்தோம் ?    எதை  எடுத்துச்செல்ல  என்கிறது பகவத்கீதை.
     “ உன்னை அறிந்தால்  நீ உன்னை அறிந்தால் உலகத்தில்  போராடலாம். ” 
 என்று சினிமாவில்  எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த அற்புதமான பாட்டு அது. அலக்ஸாண்டர் தன்னையும் அறிந்திருந்தார். இந்த உலகத்தையும் அறிந்திருந்;தார்.

       அவர் சாகும் தருவாயில்  சொன்னது இது. தான் இறந்து விடுவோம் என்று தெரிந்தது அவருக்கு.  எந்த மருத்துவமும் தன்னை காப்பாற்றாது என்றும்  தெரிந்தது. அப்போது சொன்னார்.

      'நான் என் வாழ்வில்  பெரும் செல்வத்தை சம்பாதித்தேன். அதற்காக அநியாயம்கூட  செய்தேன். இன்னும் சில மணித்துளிகளில் நான் மரணமடைவேன். என்னை இந்த மண்ணுக்குள் புதைக்கும் போது என் கைகள் இரண்டையும் வெளியே எடுத்து வைத்து புதையுங்கள். என் விரல்களை விரித்து பிரித்து வையுங்கள். என் கைகளில் விரல்களைத்தவிர வேறு எதையும் அலக்ஸாண்டர் கொண்டு செல்லவில்லை  என்று தெரிய வேண்டும்"

      உலகத்தை தன் விரல்முனையில் வெற்றி கொண்ட  அலக்ஸாண்டர் சாகும் போது இதைத்தான் சொன்னார்.

      அலக்ஸாண்டர் இறக்கும் தருவாயில்ää பட்டினத்தாருக்கு சமமான ஞானவானாக இருந்தார். அதற்கு காரணம் அவர் கற்ற கல்வி.  அவருக்கு பாடம் சொல்லித் தந்த குருநாதர். அலக்ஸாண்டரின் குரு அரிஸ்டாட்டில்.  அரிஸ்டாட்டிலின் குரு பிளாட்டோ. பிளாட்டோவின் குரு சாக்ரட்டீஸ்.
      பைபிளும் இதைத்தான்  சொல்லுகிறது.

      வானத்தில் பறவைகளைப் பாருங்கள். அவை  தனக்கென விதைப்பதுமில்லை…  அறுப்பதுமில்லை….  சேமித்து வைப்பதுமில்லை…    

ஙொய்ங்ங்…சிறுகதை


ஙொய்ங்ங்…
சிறுகதை
      தூக்கம் வருவேனா பார் என்றது. இரவு இரண்டுமணி. நடராஜன் கட்டிலில் புரண்டான்.
      உபரியான டிசம்பர் குளிர். உயரத்தில் அனாசின் மாத்திரை மாதிரி நிலா. ஆடியில் விவசாயக் கல்லூரி வறாஸ்டல்.
      விவசாய பட்டப் படிப்பு படிக்கும் ஒரு மாண்புமிகு மாணவனுக்கு இரவு இரண்டு மணிவரை தூக்கம்வராத சோகம் என்னவாக இருக்கும்…?
      ஒரு பையன் முந்தாநாள்தான் காலேஜில் சேர்ந்தான். நேற்றுப் பார்த்தால் ஆர்.எஸ். புரத்தில் எவளோ ஒருத்தியுடன் அலைகிறான்.
      நடராஜன் இன்று காலை அவனை ரேக்கிங் செய்யும்போது முட்டிப் போட வைத்தான்.
      இவன் ரூம் மேட் கணேசன். பக்கத்து கட்டிலில் ரைஸ் மில் ஓட்டிக் கொண்டிருந்தான். ( ! ! ) குறட்டை.
      அவனுக்கு ஆரேழு பெண்கள் ( கூடுதலாகவும் இருக்கலாம் ) ஊரிலிருந்து லவ் லெட்டர் எழுதுகிறார்கள்.
      பொழுது விடிந்து பொழுதுபோனால் இதற்கு பதில் எழுதவே நேரம் சரியாக இருந்தது அவனுக்கு.
      அடுத்த அறை பாண்டியன் கூட, நடராஜன் மாதிரி  தேமேன்னுதான் இருந்தான்.
      திடீரென்று ஒரு நாள் கணேசனிடம் வந்து வழிகிறான். “என்னடா என்றால் லவ்வாம். ”
      இப்படி நடராஜனை மட்டும் ஒதுக்கிவிட்டு முழு காலேஜே காதல் வயப்பட்டிருந்தது.
      இவனுக்கு எப்படி தூக்கம் வரும்…?
      இவனும் கோவையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் அலைகிறான்
      ஒரு கழுதையாவது திரும்பிப் பார்க்கணுமே…?
      இவன் என்ன புலியா சிங்கமா…?
      கடித்தா தின்றுவிடப் போகிறான்…?
      இப்படியாக உடலும் உள்ளமும் நைந்து நடராஜன் அன்று உறங்கிப் போனான்.
      அடுத்தநாள். ஞாயிறு. விடுமுறை. காலை பத்துமணி –காலேஜ் பொட்டானிகல் கார்டன்;.
      மாணவர்கள் தோட்டத்தில் அங்குமிங்குமாய், சிதறி படித்துக் கொண்டிருந்தார்கள்.
      ஒரு பக்கம் -- நடராஜன் -- பாட்டனி புத்தகம் ஏந்திய கையுடன் நடந்துக் கொண்டிருந்தான்.
      அந்த நடை பாதையில் சற்றுத் தொலைவில் விஜயா. தோட்டத்தில் தினக்கூலி.  காய்ந்த இலைச் சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்தாள்.
      பெருக்கும் துடப்பத்தை கையிலிருந்துப் பிடுங்கிக் கொண்டு கோவிலில் நிறுத்தினால் அம்மன்தான். சாஸ்டாங்கமாய் விழுந்து கும்பிடலாம்.
      இன்று நடராஜனுக்கு நல்ல மூடு, அவள் அருகாமையில் போனான்.
      இவ்வளவு அழகாய் இருந்துக் கொண்டு, ஒருத்தனையும் திரும்பிப் பார்க்காமல் இவளால் எப்படித்தான் இருக்க முடிகிறதோ…?
கடலில் பேயும் மழை …  காட்டில் காயும் நிலா…
      மூச்சுவிட்டாலும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அருகாமையில் போனான்.
    “ க்வற_ம் “  கொஞ்சம் பலமாக கனைத்துவிட்டான்.
      தூரத்தில் பெருக்கிக் கொண்டிந்த கிழவிகூட  திரும்;;பி இவனை ஒரு மாதிரியாய்  பார்த்தாள்.
      விஜயா இவனை முறைத்துப் பார்த்தாள். துடப்பத்தின் அடிப்பகுதியை இன்னொரு கையில் குத்தி, சரி பார்த்தாள்.
      மீண்டும் மும்முரமாய் பெருக்கினாள்.
      நடராஜன் மீண்டும், “ க்வற_ம் “  சற்று அளவு குறைந்த கனைப்பு.
      விஜயா பெருக்குவதை நிறுத்தி திரும்பி அவனைப் பார்க்க, அவன் அவளைப் பார்க்க மின்னல்.
      அவள் துடப்பத்தை கீழே போட்டாள். எழுந்து நின்றாள். அம்மன் அம்மன் காலை லேசாக உயர்த்தினாள். காலில் பேட்டா செறுப்பு.  நீடித்த உழைப்பு. நிறைய தேய்மானம் கண்டிருந்தது. கழட்டினாள்.  அடிப்-  பகுதியை உயர்த்தி எதையோ தேடினாள்.
    “தி டிப்ரன்ஸ் பிட்வீன் மானோகாட்டிலீடன்ஸ்… அண்ட் டைகாட்டிலீடன்ஸ்" சப்தமாக படித்தபடி வேகமாக நடந்தான் நடராஜன்.
    “ஓலகத்துலேயே இல்லாத அழகி. அலட்டிக்கறா.” சீ சீ இந்தப்பழம் புளிக்கும.;
       நடராஜன் துப்புரவாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.   ஒரு சின்ன சந்தன மரம.; நான்கைந்து கிளையுடன். பட்டன் பார்ம் பனைமரம.; பொன் மூங்கில் புதர். அத்தனையும் தாண்டி நடந்து விஜயாவை மறந்தான்.
      மீண்டும் ஒரு மின்னல்.
      யாரோ தூரத்திலிருந்து ஒரு வளையல் கை. இவனை அருகில் வருமாரு சைகை காட்டி ஒல்லியாய்  தாவணி கட்டிய ஒரு கை அசைந்தது. வேறு யாரையும் அல்ல. இவனைத் தான். மறுபடியும் - அதே வளையல் அதே கைசைகை. நடராஜன் மனசு படபட.
      இவனுக்கு கைகளுக்கு பதிலாய் பூ-பூவாய் இறக்கைகள் முளைக்க தும்பி மாதிரி, வானத்தில் எம்பி, நடராஜன் வேகமாய் நடக்க பாதை அனாவசியமாய் வளைந்து வளர்ந்தது, எரிச்சல். அவசரம.; வேகம.; இரண்டே எட்டுதான். கைக்கு எட்டும் தூரத்தில் அந்த கன்னி.
      அவள் ஒரு ரயில் கற்றாழை மடலை பிடித்தபடி. திரும்பி நின்று வெட்கப்பட்டாள் - கூர்ந்து கவனித்தான்.
      மங்கை அல்ல.  மரியாதையான நங்கை. திருநங்கை.
      இவன் குனிந்து செருப்பைக் கழட்டினான். விஜயா ஞாபகத்தில் வர அதைப் போட்டுக் கொண்டு திரும்பினான்.
      பூந்தோட்டத்தில்குழந்தைகள் விளையாடும் வட்ட வடிவ மண்டபம் காலியாய் இருந்தது.
    “ தி டிப்ரன்ஸ் பிட்வீன் மானோகாட்டி லிடென்ஸ் அண்ட் டைகாட்டி லீடென்ஸ் “ மண்டபத்தில் நடந்தபடி உண்மையிலேயே படித்தான் நடராஜன்.
      ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும்.
    “ பளார் “ வேகமாய் ஒரு அறை. இவன் கன்னத்தில்தான்.
      சின்ன வயசாய் இரண்டு வில்லன்கள். இவனை மாறி மாறி அடித்தான்கள்.
      தூரத்து பச்சையே… துளிர் நிலவே… கவிதையிலயா லவ் லெட்டர் குடுக்கறே… பொட்டானிகல் கார்டன்ல படிக்க வந்தா ஒழுங்கா படிச்சிட்டுப் போகணும்.
      சினிமா மாதிரி அடித்தான்கள் பாவிகள்.
      இவன் எங்கே கவிதை எழுதினான்…? எவனோ எழுதிய கவிதைக்கு இவன் வாங்கி கட்டிக்கெண்hடான்.
      ஓம்மூஞ்சிக்கி லவ் லெட்டர் ஒரு கேடா…?  சோம்பேறி ! எப்படி அது தூரத்து பச்சையே துளிர் நிலவே ! கவிதை ?
   “  நான் எழுதலடா… பாவிங்களா…” என்று சொல்ல, அவகாசம் இல்லாமல் அடித்தான்கள்.
      நல்லவேளை அடித்ததை எவனும் பார்க்கவில்லை. இவன் சுதாரித்து எழுந்தபோது, அவர்கள் போய்விட்டிருந்தார்கள்.
      இவன் வேகமாய் அறைக்குத் திரும்பிய போது, ரூம்மேட் கணேசன் இவனிடம் சொன்னான். ' ஒரு வழியா அந்த பொண்ணுகிட்ட லெட்டரை குடுத்திட்டேன். பதில் கேக்கறதுக்கு முன்னாடி அவளுக்கு தெரிஞ்சு நாலஞ்சி பையனுங்க வந்துட்டானுங்க. நைசா அங்கருந்து நழுவிட்டேன்.
இந்த கவிதையதான் அவளுக்கு எழுதி கொடுத்தேன். வழக்கம்போல  “அவன் எழுதிய லவ் லெட்டரை நடராஜனிடம்; படித்துக் காட்டினான்" நல்லா இருக்கா பாரு.
      தூரத்துப் பச்சையே … துளிர் நிலவே… என்று கவிதையை கேட்டதுதான் பாக்கி.  “பளார் பளார்" என்று ஓங்கி அறைந்தான் தன்னால் முடிந்தவரை அவன் கன்னத்தில் நடராஜன்.
      கணேசன் காதுக்குள்  “ ஙொய்…ங்…”
    “ஒம் மூஞ்சிக்கு கவிதையில லவ் லெட்டரு…?  சோம்பேறி”
88888888888888
                 




முதலில் நம்பிக்கை வேண்டும் - பேச்சு

முதலில் நம்பிக்கை வேண்டும்

(மகளிர் குழுக்களிடையே  பேசியது)

பேச்சு 

      கையில் ஒரு நயா பைசாக்கூட இல்லாம ஒரு வசதியான வாழ்க்கைய உருவாக்கிக்கொள்ள முடியுமா முடியும். அதப்பத்தித்தான்  நான் இப்போ உங்கக்கிட்ட பேசப்போறேன்.

      வெறுங்கையில முழம்போட முடியுமா எல்லோரும் முடியாதுன்னு சொல்லுவாங்க. நான் சொல்றேன் முடியும். அதப்பத்தித்தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.

      மேயப்போறமாடு  கொம்புல புல்ல கட்டிக்கிட்டு போகுமா போகாது. கரெக்டா சொல்லுவீங்க.  ஏன்னா அது மாடு. அதுக்கு ஐந்து அறிவு. நம்மைவிட ஒரு அறிவு கம்மி.

      கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓரு இளைஞனை சந்தித்தேன். எங்ககிட்ட மரம் வாங்க வந்தார். அவுங்க அப்பா செங்கல் சூளை வைத்திருந்தார். மிஞ்சிமிஞ்சி போனா இருவத்தி அஞ்சி வயசுக்கு மேல தாண்டாது. கருப்பா இருந்தாலும் நல்ல களையான முகம்.

      'தம்பி என்ன படிச்சிருக்கீங்க ?"  அப்படீன்னு கேட்டேன்.

      'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்"  அப்படீன்னார்.

      'டிpகிரியா  டிப்ளமாவா  ?"  

      'டிகிரி சார் முடிச்சி மூணு வருஷம் ஆச்சி" 

      'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க ?"

      'அப்பாவுக்கு உதவியா இருக்கேன். செங்கல்சூளை வேலை எல்லாம் அத்துப்படி சார்"

      'வேலைக்குப் போகலையா ?"  அப்படீன்னேன்.

      'யர்ர் சார் குடுக்கறாங்க ?" 

      பத்துவருஷத்துக்கு முன்னால இருந்ததைவிட இப்பொ  10 மடங்கு வேலை வாய்ப்பு அதிகம். உள்ளுர்லயும் வேலை கிடைக்குது. வெளி நாட்டுலேயும் வேலை கிடைக்குது. இன்னக்கி 100க்கு 50 குடும்பத்து பிள்ளைங்க வெளிநாட்டுல  வேலை பார்க்குதுங்க.

      தன்முனைப்பு வேணும். முயற்சி வேணும். தானா எதுவும்  வருமா வராது. தேடிப் போகணும். நடந்த காலுக்கு சீதேவி. தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறது பைபிள்.  எதுவும் கேட்டாத்தான் கிடைக்கும்.

      'அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று  அலட்டிக்கொண்டார். தூங்காதே தம்பி தூங்காதே" எம்.ஜி.ஆர். பாடுவார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதின பாட்டு.

      வேலையத்தேடி நாமத்தான் போகணும். வேலை நம்மத் தேடி வராது.

      'எப்படியாவது என்னை இன்ஜினியரா ஆக்கணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். கடனை உடனை வாங்கி என்னை படிக்க வச்சார். கொஞ்சமா இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை கூட வித்து என்னை படிக்க வச்சார். படிச்சேன். பட்டம் வாங்கினேன். ஆனா வேலை வாங்க முடியலை" அந்த தம்பி சொன்னது இன்னும் என் காதுல ஒலிக்குது..

      படிப்பு ஒரு ஆயுதம். படிப்பு ஒரு கருவி. படிப்பு ஒரு வரம். அதைப் பயன்படுத்தத் தெரியணும். அப்பதான் அதனோட பயன் நமக்குக் கிடைக்கும்.

      அதனால படிச்சா மட்டும் போதாது. அதை பயன்படுத்தத் தெரியணும். படித்தால் மட்டும் போதுமா அப்படீன்னு ஒரு சினிமாக் கூட வந்தது.

      மகளிர் குழு உறுப்பினர்களுக்கு லோன் தர்றாங்க. அதனால முன்னுக்கு வந்தவங்க பல ஆயிரம்பேர். அதை வாங்கினவங்க சரியா பயன்படுத்தினா எல்லோருமே முன்னுக்கு வரலாம். வர முடியும்.

      ஆனா நாம என்ன செய்யறோம் ஒரு 10,000 ரூபா கையில கிடைத்த உடனே டூர் புரொக்ராம் போடுவோம். திருப்பதிக்கு டூர். குடும்பத்தோட திருப்பதிக்கு டூர் புரொக்ராம்.

      புருஷன் பொண்டாட்டி , புள்ளைங்க நாலு பேர். மொத்தம் ஆறு டிக்கட். ஒடனே இந்தம்மா அம்மாவுக்கு போன் போடுவாங்க.

      'அம்மா குழுவுல சுயதொழில் தொடங்க  10,000 ரூபா குடுத்துட்டாங்க கையில பணம் வந்தாச்சு. ஞாயிற்றுக் கிழமை நாங்க குடும்பத்தோட, திருப்பதி போறோம்'

       'ஆமாம் எனக்கும்கூட வேண்டுதல் இருக்கு. நான் எங்கப் போகப் போறேன் ?"

      'அதுக்குத்தான் ஒனக்கு போனைப் போட்டேன்.  சரின்னு சொல்லு ஒனக்கும் அப்பாவுக்கும் சேர்த்து டிக்கட்டை போட்டுடறேன்.."

      'சரிம்மா  உன்னைமாதிரி பிள்ளைங்க மனசு வச்சாத்தான் எங்களமாதிரி கிழடு கட்டைங்க கோயில் குளம் ன்னு சுத்திப் பார்க்க முடியும்"

    “சரிம்மா ஞாயிற்றுக் கிழமை காலம்பற 8  மணிக்கு முன்கூட்டியே கிளம்பி வந்துடு. அப்பாக்கிட்ட சொல்லும்மா

      'இப்போ குடும்ப டூர்  எட்டுப்பேர் ஆச்சி. அப்புறம் வீட்டுக்காரர் டடூட்டி முடிஞ்சி வந்தார். பக்குவமா சொன்னாங்க. ஏங்க 8 டிக்கட்டுக்கு சொல்லிட்டேன். உங்க மாமனார் மாமியார் வரன்னிட்டாங்க. அதான் எங்கப்பாவும் அம்மாவும்.

    உடனே அவர்; சொன்னார். 'உன் மாமனார் மாமியார்கூட வரன்னிட்டாங்க. அதான் எங்கப்பாவும் அம்மாவும். பத்து டிக்கட்டா சொல்லிடு"

      ஆக பத்து பேர். திருப்பதி போயி மொட்டை அடிக்கிறது. கன்பர்ம்டு. டூர் போயிட்டு, திரும்பி ஊர் வந்து, பஸ்ஸைவிட்டு இறங்கின உடன் கணக்குப் பண்ணா, சிறு தொழில் செய்ய வாங்கின கடன் பத்தாயிரமும் பணால்.

      இதே மாதிரி இன்னொரு அக்காவும்; கடன் வாங்கினாங்க. இதே பத்தாயிரம் தான். தன் கையிலிருந்து ஒரு பத்தாயிரம் போட்டாங்க உள்கடன் ஒரு அஞ்சாயிரம் வாங்கினாங்க, மொத்தம் இருவதினாயிரம் சேர்த்து ஜெர்சிகிராஸ் மாடு வாங்கினாங்க. காலையில 10 லிட்டர் சாயஞ்காலம் 10 லிட்டர் பால் கறக்குது. ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால். ஒரு லிட்டர் பால் 30 ருபாய். அப்போ ஒரு நாளைக்கு 600 ரூபாய் வருமானம். 300 ரூபாய் செலவு போக 300 ரூபாய் லாபம். அப்போ 30 நாளைக்கு ஒரு மாசத்துல 9000 ரூபாய் லாபம்.

     இப்போ சொல்லுங்க. யார் இந்த கடனை ஒழுங்கா திருப்பி கட்டுவாங்க ? மொட்டை போட்ட அக்காவா ? மாடு வாங்கின அக்காவா

      10 மாசத்துல அந்த கடன் அடைஞ்சி போச்சின்னா மாடும் கன்றுக்குட்டியும், அவுங்களுக்கு சொந்தம். குடும்பத்தோட மொட்டை அடிச்சவங்களோட நிலைமைய யோசிச்சிப் பாருங்க. பத்து மொட்டை   மட்டும்தான் மிச்சம்.

      அவுங்க குடும்பத்தோட மொட்டை அடிச்சவங்க. மொத்தம் பத்து பேரு. ஆனா அவங்ககூட போகாமலே ஒருத்தர் மொட்டை அடிச்சிகிட்டார். அது யாரு சொல்லுங்க பார்ப்போம் ? நீங்க சுலபமா சொல்லிடுவீங்க. அவுங்களுக்கு யாரு லோன் வாங்கிக் கொடுத்தாரோ அந்த அப்பாவிதான்.

      ராமனால தனக்கு ஏற்படக்கூடிய அழிவை நினைச்சி மனசு கலங்கி நின்றான் ராவணன். அது எப்படி இருக்குன்னா கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்  இலங்கை வேந்தன் ! அப்படீன்னு எழுதுவார் கம்பர்,

      ஆனா இப்போ கம்பனை எழுதவிட்டால், அதையே மாத்தி எழுதிடுவார்.  எப்படி ?

      கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.

      ஆனா இதனால யாருக்கு நஷ்டம் ?   யோசிச்சி பாக்கணும்.  மொட்டை அடிக்க கடன் கொடுத்தவருக்கா ? மொட்டை அக்காவுக்கா ?

      2003 வது வருஷம், நான் அய்த்ராபாத்  போயிருந்தேன். அங்க 'மேனேஜ்" அப்படீன்னு பயிற்சி மையம். வாட்டர்ஷெட் பயிற்சிக்காக போய் இருந்தேன். கிட்டதட்ட 30—40 பேர் அந்தப் பயிற்சியில் கலந்துகிட்டோம். இந்தியாவில் இருக்கும், எல்லா மாநிலத்திலிருந்தும் வந்திருந்தாங்க.

      ஒரு நாள் வைறதராபாத்திலிருந்து, ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு கிராமத்தில் ஒரு மகளிர் குழுவுக்கு, கூட்டிகிட்டு போனாங்க. பத்து பதினஞ்சி பெண்கள் இருந்தாங்க. அவங்களோட பேசி, அவங்களப்பத்தி தெரிஞ்சிக்கீங்க. அப்படீன்னு சொன்னாங்க.

      நாங்க மாறி மாறி கேள்வியா கேட்டோம். எப்போ உங்க குழுவை தொடங்கனீங்க ? எத்தனை உறப்பினர்கள் இருக்காங்க? எல்லாத்துக்கும் சளைக்காம பதில் சொன்னாங்க.

      'ஒரு வருஷத்துல 2 ½ கோடி ரூபாய்க்கு உங்க குழு மூலமா டெண்டர் எடுத்து  வேலை செய்ததா சொன்னாங்க. என்ன வேலைகள் எடுத்து செய்தீங்க ?"

      'பள்ளிக்கூடம் கட்றது , சத்துணவுக்கூடம் கட்றது , ரோடு போடறது அந்த மாதிரி வேலைகள் எல்லாம் எங்க குழு மூலமா எடுத்து செய்யறோம்"

      இதைக் கேட்டதும் நாங்களெல்லாம் அசந்து போயிட்டோம். யோசிச்சி பாருங்க. ஒரு சாதாரண மகளிர் குழு இரண்டரை கோடி ரூபாய்க்கு வேலை எடுத்து செஞ்சிருக்காங்க. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல. இரண்டரை கோடி.

      அதைவிட எங்ககூட வந்திருந்த இன்னொருத்தர் ஒரு கேள்வி கேட்டார். சிலபேர் எப்பவுமே ஏடாகூடமாக கேள்வி கேட்பாங்க. அதுக்கு அவங்க சொன்ன பதில் டாப்கிளாஸ். நாங்க எல்லோருமே ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டோம்.

      ஏம்மா ரோடு போடறோம் பில்டிங் கட்றோம்ன்னு சொல்றீங்களே உங்கள் குழுவில் யாராவது இன்ஜினியர் இருக்காங்களா அப்படீன்னு கேட்டார் ஒருத்தர்.

      உடனே அந்தம்மா எதிர்க்கேள்வி கேட்டது.

      'சார் உங்க வீட்ட யார் கட்டினாங்க ?"

      'கான்ட்ராக்டர்கிட்ட விட்டோம். அவர்தான் கட்டினார்" என்றார்.

      'அதுமாதிரிதான் நாங்க கட்டடம் கட்றதும், ரோடு போடறதும்" என்று நெற்றிப்பொட்டில் அடிச்ச மாதிரி சொன்னதும், கொஞ்ச நேரம் நிசப்தமா இருந்தது.
      அதற்குப் பிறகு இவர் எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. அதற்குப்பிறகும் அந்தம்மாவே தொடர்ந்து பேசினாங்க.

      'நீங்க நெனைக்கறது சரிதான். நாங்க யாரும் அஞ்சுக்கு மேல படிக்கல. ஆனா எங்க குழு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அரசாங்க அதிகாரிங்க எங்கள நம்பறாங்க. எங்கக்கிட்ட வேலைகொடுத்தா சிறப்பா முடிச்சித் தருவாங்கன்னு நம்பறாங்க. உண்மைய சொல்றதுன்னா எங்களுக்கு வர்ற வேலைய தராதரம் பார்த்துதான் நாங்க எடுத்துக்கறோம்"

      எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அப்போ இன்னொரு கேள்விய கேட்டார் ஒருத்தர். 'உங்ககுழுவை சிறப்பா வளர்த்திருக்கீங்க. உங்க குடும்ப வருமானம் அல்லது உங்க குடும்பம் எல்லாம் எப்படி வளர்ந்திருக்குன்னு  தெரிஞ்சிக்கலாமா ?"

      இந்தக் கேள்வியைக் கேட்டதும், அந்தம்மா முகத்துல ஒரு சந்தோஷம் தெரிஞ்சது. சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க.

      'எம்பையன் லண்டண்ல டாக்டருக்கு படிக்கிறான். இந்த அம்மா இருக்காங்களே இவங்கதான் எங்கள் குழு பிரதிநிதி.  அவுங்க பொண்ணு அமெரிக்காவுல வேலை பாக்குது" என்று சொன்னதும், நாங்கள் ஆச்சரியத்துடன் அவர்களை மனதார பாராட்டினோம்.

      கடைசியா அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்படும்போது அந்தம்மா சொன்னாங்க. உங்க ஊர்ல எல்லா குழு பெண்கள்கிட்டயும் சொல்லுங்க.

'நாம வளர முடியும். நாம சம்பாதிக்க முடியும்ங்கற நம்பிக்கை இருந்தா போதும். எல்லா குழுக்களுமே எங்களைவிட நல்லா பெரிசா வளரமுடியும்"

     அவுங்க சொன்ன மாதிரி நீங்க கூட வருஷத்துக்கு 2 ½ கோடி இல்ல, அஞ்சு கோடிக்கு கூட வேலை பாக்கலாம். உங்க குழந்தைகளையும் வெளி நாடுகள்ல படிக்கவைக்க முடியும்.

      உங்க குழந்தைகளையும் நீங்க அமெரிக்காவுல படிக்க வைக்கலாம். ஆஸ்திரேலியாவுல படிக்க வைக்கலாம். லண்டன்ல படிக்க வைக்கலாம். ரஷ்யாவுலகூட படிக்க வைக்கலாம். ஏன் உலகத்தின் எந்த பகுதியிலேயும் படிக்க வைக்கலாம்.

      உங்களுக்கு வேண்டியது எதுன்னா நம்பிக்கை. அதுமட்டும்தான். நம்பிக்கை  நம்பிக்கை  நம்பிக்கை.

தொழில் தொடங்க முதலில் தேவை முதலா ? நம்பிக்கையா ? இப்பொ சொல்லுங்க.

      முதலில் நம்பிக்கை இருந்தால் போதும். முதல் தானாக வரும். ஆக இப்போது உங்களுடைய தேவை, நம்பிக்கை ! நம்பிக்கை ! நம்பிக்கை !